சென்னை: அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்பட்டிருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் லெனின் பால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (நவ.10) நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அலுவலர்களின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆட்டோக்களில் வெளியே பொருத்தப்பட வேண்டிய கண்ணாடிகள் வாகனத்தின் உள்ளே பொருத்தப்படுவது, விதிகளை மீறி வாகனங்களின் முகப்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது மற்றும் விதிகளை மீறும் வகையில் நம்பர் ப்ளேட்கள் வைப்பது உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அரசு இயற்றும் சட்டங்களை நீதிமன்ற உத்தரவு மூலமாக மட்டுமே செயல்படுத்த வேண்டிய நிலை தொடர்வதாக புகார் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தாமாக முன் வந்து தலைமை செயலரை எதிர் மனுதாரராக சேர்த்து ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:திருத்தணிகாச்சலம் குண்டர் சட்டம் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!