சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலிலிருக்கும் நிலையில், மீதமுள்ள 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதால், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன?.
இட ஒதுக்கீட்டால் பயன்பெறுவோரின் குடும்பத்தார்தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் அப்படியேதான் இருக்கின்றனர். இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து, பொதுப்பிரிவினருக்கான 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் தான் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
இதனால் தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு தகுதி அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என்று அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது. இதனடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.