கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும், இதனை தடுக்க விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ். ஆனந்தி அடங்கிய அமர்வில் நேற்று (மே 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் கிடையாது. இதுகுறித்து புகார்கள் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.