தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜனநாயக கடமையாற்றிய மனநலம் பாதித்தோர்! - மனநலம் பாதிக்கப்பட்டோர் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் தகுதி பெற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் இன்று வாக்களித்துள்ளனர். மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதார மீட்சி, வேளாண் வளர்ச்சி உள்ளிட்டவற்றை பெருக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

mentals
mentals

By

Published : Apr 6, 2021, 7:19 PM IST

தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார் என்பதை நன்கு ஆராய்ந்து தெளிந்த மனதுடன் பொதுமக்கள் முடிவு செய்யும் நாள் இன்று. இது பொதுவானதுதான் என்றாலும், தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை மனநலம் குன்றியவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வரலாற்று நிகழ்வில் மாநிலம் முழுவதும் உள்ள மனநல மருத்துவமனைகளின் தகுதியுடைய நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 884 பேர் உள்ள நிலையில், அவர்களில் அரசியல் புரிதல் உடையோர், கட்சிகள், வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து தெரிந்தவர்கள் ஆகியன குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதனை செய்ததன் அடிப்படையில், 56 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 84 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டோர் இவ்வாறான விஷயங்களில் எண்ணிப்பார்த்து வாக்களிக்கக் கூடிய மனநிலையில் இருக்கமாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. ஆனால், மனநல சட்டப்படி, மனநலம் குன்றுதல் என்பது தற்காலிகமான ஒன்று என்றும், குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கு வாக்களிக்க தகுதி உள்ளதா, அதற்கான புத்தி கூர்மை இருக்கிறதா என்பதை பொருத்துதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜனநாயக கடமையாற்றிய மனநலம் பாதித்தோர்!

மருத்துவர்களின் பரிசோதனை முடிந்ததும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தகுதியுடைய நோயாளர்களுக்கு வாக்களிப்பதற்கான பயிற்சி, விழிப்புணர்வு ஆகியன ஏற்படுத்தப்படுகிறது. அவ்வாறு, தகுதி பெற்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் இன்று தங்களது ஜனநாயக கடமையை தெளிந்த மனதுடன் ஆற்றினர். அதோடு, அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் விலைவாசி, பெட்ரோல் டீசல், பேருந்து கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க முயல வேண்டும் எனவும் கட்சிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ வேண்டும், பொருளாதார மீட்சிக்கு உதவவும், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இவை அனைத்தையும் கடந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர்கள் புன்னகை பூக்கின்றனர்.

பொதுவாகவே மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்து சமூகத்தில் நிலவும் பல முன்முடிவுகளையும் மாற்றும் விதமாகவே தேர்தல் ஆணையத்தின் இந்நகர்வு அமைந்திருக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் உரிமையில் வாக்குரிமையும் ஒன்று என்பதை அவர்கள் புரிந்து கொண்டதை, தேர்தல் ஆணையமும் உணர்ந்து கொண்டிருப்பது உண்மையிலேயே மனநலம் குன்றியோர் மீட்சிக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதையும் படிங்க: தேர்தலை புறக்கணித்த கத்தாரிகுப்பம் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details