சென்னை: எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், "மெய்ப்பட செய்". ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை, வேலன் இயக்கியுள்ளார். பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய இயக்குநர் ஆர்.வி உதயகுமார், "தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழை பார்த்துதான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள். நம் படங்கள் அங்கு ஓடும்போது நாம் சந்தோஷப்படுகிறோம் அல்லவா, அதுபோல் இப்போதும் சந்தோஷப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது, அதை சரி செய்ய இயக்குநர் சங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் ராஜ்கபூர், "கேஜிஎஃப் ஓடியது, ஆர்ஆர்ஆர் ஓடியது என்கிறார்கள். ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நான்கு வருடம் எடுத்தார்கள், அதெல்லாம் லாபமே தராது. மைனா, 2 கோடியில் எடுத்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்தது, அதுதான் படம். ஓடுது ஓடுது என சொல்லும் படத்தில் கதை கேளுங்கள், இருக்காது. ஜெய்பீம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது, அது போல இந்தப்படமும் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் நகுல் மனைவிக்கு தொடர்ந்து ஆபாச வீடியோ அனுப்பும் அடையாளம் தெரியாத நபர்கள்!