தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவி, தந்தையை கைதுசெய்ய காவல் துறை முடிவு!

medical council scam daughter and father arrests
medical council scam daughter and father arrests

By

Published : Dec 18, 2020, 12:27 PM IST

Updated : Dec 18, 2020, 12:47 PM IST

12:20 December 18

சென்னை: மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவியும், அவரது தந்தையும் இன்று (டிச. 18) காவல் நிலையத்தில் முன்னிலையாகவில்லை என்றால் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை காவல் துறையினர் தயாராக இருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்ஷா என்னும் மாணவி 610 மதிப்பெண்கள் பெற்ற ஹிரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி தீக்ஷா, அவரது தந்தை மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து டிசம்பர் 15ஆம் தேதி காவல் நிலையத்தில் முன்னிலையாகி விசாரணைக்குள்பட வேண்டுமென இருவருக்கும் காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், இருவரும் விசாரணைக்கு காவல் நிலையத்தில் இதுவரை முன்னிலையாகவில்லை. மேலும் முன்னிலையாவது குறித்து எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (டிச. 18) மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென கூறி காவல் துறை சார்பில் இரண்டாவது அழைப்பாணை அனுப்பியது.

இரண்டாவது அழைப்பாணை அடிப்படையில் மாணவி தீக் ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் இன்று (டிச. 18) முன்னிலையாகத் தவறினால் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை காவல் துறையினர் தயாராக இருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வழக்கினைப் பொறுத்தவரையில் குற்றவாளி காவல் நிலையத்தில் முன்னிலையாக மூன்று அழைப்பாணைகள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், மூன்று முறை அனுப்பிய நிலையில் வழக்கில் தொடர்புடைய நபர் காவல் நிலையத்தில் முன்னிலையாகவில்லை என்றால் அவரைப் பிடிப்பதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ்: மாணவி, தந்தைக்கு 2ஆவது அழைப்பாணை!

Last Updated : Dec 18, 2020, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details