விழுப்புரம் மாவட்டம் ரோசனையை சேர்ந்த சந்திரலேகா தாய்த்தமிழ்ப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரையும், பின்னர் 12ஆம் வகுப்பு வரை முருங்கம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 471 பெற்று பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற சந்திரலேகா, கல்வியில் சிறந்து விளங்கியதை பாராட்டி தமிழ்நாடு அரசு, ’பெருந்தலைவர் காமராஜர் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது.
அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சியை பெற்று, நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் அவர் பெற்ற நிலையில், நேர்காணலுக்கான அழைப்போ, 7.5% ஒதுக்கீட்டிலான கலந்தாய்விற்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் என்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை அவர் தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருப்பதாகவும், தமிழக அரசின் கடிதம் வந்துள்ளது. நேர்காணலுக்கு அழைக்காமலே அதில் கலந்து கொண்டதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியை வேண்டாம் என தான் தவிர்த்து விட்டதாகவும் பதில் அளித்ததாக கடிதம் வந்திருப்பது, சந்திரலேகாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில், அவரது தாயார் மகேஷ்வரி தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.