தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுத்திட நடவடிக்கை - அமைச்சர் கா.ராமச்சந்திரன் - மகாத்மா காந்தி

மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுத்திட வனப்பணியாளர்கள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட நடவடிக்கை
வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட நடவடிக்கை

By

Published : Oct 2, 2022, 10:04 PM IST

சென்னைஎழும்பூரில் இன்று(அக்.02) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் முதல் நாள் தமிழ்நாடு புலிகள்(Tiger) காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாட்டு நிகழ்ச்சிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாட்டை தொடங்கி வைத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, ”வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்து நாடெங்கிலும் உள்ள பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்குகள் பற்றி அறிந்துகொள்ளவும், மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் நாள் தொடங்கி 8ஆம் தேதி வரையிலான ஒரு வார காலம் வன உயிரின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுத்திட நடவடிக்கை - அமைச்சர் கா.ராமச்சந்திரன்

இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘‘வன உயிரினங்கள் பாதுகாப்பதில் நமது பங்களிப்பு – வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம்’’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள மொத்தப் புலிகள் எண்ணிக்கையில் 10 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் சரணாலயம் 6,195 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு மிகுந்த கவனம் செலுத்தி பராமரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33 விழுக்காடு உயர்த்திட பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

புலிகள், யானைகள் காப்பகப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், வனவிலங்குகளுக்கு தேவையான காலங்களில் ஆங்காங்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வனப்பரப்பை அதிகப்படுத்துதல், வன விலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழாவின் முதல்நாள் தமிழ்நாடு புலிகள்(Tiger) காப்பக கலந்தாய்வு மாநாடாக நடத்தப்படுகிறது.

வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளைத் தடுத்திட வனப்பணியாளர்கள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இதையும் படிங்க:காதி தயாரிப்புகள் தன்னம்பிக்கையின் அடையாளம்; இந்தியாவின் முத்திரை - ஆளுநர் ஆர். என். ரவி

ABOUT THE AUTHOR

...view details