இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. (முதன்மைத் தேர்வு) மற்றும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து இல்லாததால், மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தாயகம் திரும்ப உதவிடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு அதிகாரி சரவணக்குமார் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாணவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தவுடன், சிறப்புப் பேருந்துகளை அனுப்பி 2500 மாணவர்களை கோட்டாவிலிருந்து அழைத்துவர, அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும், ஜார்கண்ட் மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப இரண்டு சிறப்பு இரயில்களை ஏற்பாடு செய்துள்ளார்.