இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு உதவிகளை நாடி கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு அரசிடம் நேரில் முன் வைப்பதற்காக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.
அங்கு, அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றாமல், மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.