நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 7,71,500 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கலந்தாய்வுக்குழு நடத்திவருகிறது. அதில் சேர விரும்பும் மாணவர்கள் ’https://mcc.nic.in/UGCounselling’ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும். மேலும், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க, அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை கட்டணங்களை செலுத்தலாம் எனவும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரிகளின் இடங்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 5 ஆம் தேதி இறுதியாக இடங்கள் அறிவிக்கப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நவம்பர் 6 முதல் 12 ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
அதேபோல், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க நவம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தவும், நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை கல்லூரி இடங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டு, நவம்பர் 25ல் இறுதி இடங்கள் அறிவிக்கப்படும். நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அதற்குள் சேராமல் காலியாக இருக்கும் இடங்கள், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கல்!