தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’தோழர் மைதிலி சிவராமனுக்கு செவ்வஞ்சலி’ - சிபிஎம் - Maithili Sivaraman passes away

கரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்த மூத்த உறுப்பினரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான மைதிலி சிவராமனுக்கு செவ்வஞ்சலி செலுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

மைதிலி சிவராமன்
மைதிலி சிவராமன்

By

Published : May 30, 2021, 10:32 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் இயக்கத் தலைவரான மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் நேற்றிரவு (மே. 29) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “தோழர் மைதிலி சிவராமன் அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலை செய்தார். 1966ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது கியூபா சென்று வந்தார். 1960களில் வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் திரும்பினார். அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார். ரேடிக்கல் ரெவியூ என்ற பத்திரிகையை என். ராம், ப. சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து நடத்தி வந்தார்.

கீழ்வெண்மணி சம்பவம்

1968ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிக்கல் ரெவ்யூ பத்திரிகையில் ஆவணப்படுத்தி இந்த கொடூரச் சம்பவத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்த முதலாவது நபர் தோழர் மைதிலி சிவராமன் ஆவார். கீழ்வெண்மணிப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷனுக்குப் பல்வேறு ஆவணங்களையும் திரட்டித் தந்தவர். இது குறித்து ‘ஹாண்டட் பை ஃபயர்’ என்கிற புத்தகம் எழுதியிருக்கிறார்.

தொழிற்சங்கப் போராளி

தோழர். மைதிலி போர்குணமிக்க தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்து சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். சி.ஐ.டி.யூ அமைப்பின் மாநிலப் பொறுப்புகளை வகித்தவர். கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொண்வண்டு சோப் கம்பெனி, பாலு கார்மெண்ட்ஸ், குவாரி தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர். குறிப்பாக கார்மெண்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதாரச் சுரண்டலையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாக தடுத்து நிறுத்திய பெரும் பங்கு தோழர் மைதிலி சிவராமனுக்கு உண்டு. சிறு நிறுவனங்களில் மட்டுமின்றி மெட்டல்பாக்ஸ், அசோக் லேலண்டு, யூனியன் கார்பைடு, டிவிஎஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் நடந்த தொழிற்சங்க போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் தோழர் மைதிலி. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவை தமிழ்நாட்டில் உருவாக்கி வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர். மத்தியதர வர்க்கப் பெண் ஊழியர்களை தொழிற்சங்கத்திலும், மாதர் இயக்கத்திலும் ஸ்தாபனப்படுத்துவதில் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

பெண்களின் பாதுகாவலர்

1973ஆம் ஆண்டு பாப்பா உமாநாத், கே.பி. ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய ஸ்தாபகர்களில் ஒருவர் தோழர் மைதிலி சிவராமன். வரதட்சணை கொலைகள், தற்கொலை என மூடி மறைக்கப்பட்ட நிலைமை, காவல் நிலையங்களில் ஆண் குற்றவாளிகளை பிடிப்பதற்காக பெண்களை பணயக் கைதியாக வைத்த போக்கு, குழந்தை தொழிலாளர்கள், பெண்சிசுக்கொலை, சாதிய ஒடுக்குமுறை, குழந்தைத்திருமணம், இடஒதுக்கீடு என ஒவ்வொரு பகுதி பிரச்னைகளையும் ஆய்வுக்குள்ளாக்கி போராட்டங்களை முன்னெடுத்தவர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சென்னை நடுக் குப்பத்தில் மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை அறியும் குழுவாகச் சென்று விவரங்களை வெளிக்கொண்டு வந்தவர். பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான பல பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அரும்பாடுபட்ட தலைவர்.

தோழர் மைதிலி தமிழ்நாடு பெண் விடுதலைப் போராளிகளில் முன்வரிசையில் நின்றவர். பன்முகத் திறன் கொண்டவர். மாதர் இயக்கத்தின் தத்துவார்த்தப் பின் புலனை ஊழியர்கள் மத்தியில் பயிற்றுவித்தவர். தனது உணர்வுப்பூர்வமான எழுத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை விதைத்தவர். சாதியம், பெண்ணியம், மதவாதம், மாறிவரும் அரசியல் சமூக சூழல் ஆகியவை குறித்து பயிற்றுவிப்பதில் முன் நின்றவர். பல அரசியல் வகுப்புகள், குறிப்பாக ‘மார்க்சிய பார்வையில் பெண்ணியம்’ குறித்த வகுப்பினை பரவலாக நடத்தியவர். சாதி எதிர்ப்புப் போராட்டம், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தோடு இணைத்துச் சென்றவர்.

இறுதி மூச்சு வரை இடதுசாரி கொள்கை

அசவரநிலை காலத்தில் தோழர் ஹரிபட் சிறையிலும், தோழர்கள் வி.பி.சி, பி.ஆர்.பி, வி.எம்.எஸ், ஏ.எஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகவும் இருந்த காலத்தில் காவல்துறையின் எத்தனையோ நெருக்கடிக்கு மத்தியில் மாதர் சங்கத்தை வழி நடத்தியதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூ பணிகளையும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர். மகளிர் சிந்தனை ஆசிரியராகவும் பணியாற்றியவர். வர்க்கம் மற்றும் பாலின பிரச்சனைகள் குறித்த ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களையும் எழுதியவர். எண்ணெற்ற பெண் தோழர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தவர். அவரால் முழு நேர ஊழியராக்கப்பட்ட பல பெண் தோழர்கள் உள்ளனர். தான் ஏற்றுக் கொண்ட இடதுசாரிக் கொள்கையை தனது இறுதி மூச்சு வரை கடைப்பிடித்தவர்.

பேரிழப்பு

சில ஆண்டுகளாக ‘அல்சைமர்’ என்ற தீவிர ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு அவரது கணவர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோர் கவனிப்பில் தோழர் மைதிலி இருந்தார்.

தோழர் மைதிலி அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், பெண்கள் இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வீரவணக்கத்தையும், புகழஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது கணவர் தோழர் கருணாகரனுக்கும், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆ.ராசாவின் மனைவிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details