மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை வானூர்தி நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். இந்தக் குடியுரிமை திருத்த மசோதா, நாட்டில் அனைவரையும் சமமாக கருத வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு மாறானதாக அமைந்துள்ளது.
மத ரீதியில் மக்களைப் பிரித்து, பாகுபாடு காட்டுகிற இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பாசிச பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்தை மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்க்க வேண்டும். இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்கும் எதிரானது.
இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அதிமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும். பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநில முதல்வர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனிமேலாவது இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த மாட்டோம் என சொல்வதற்கு தமிழக முதல்வர் முன்வரவேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம் சிறுபான்மையினர்களை மட்டுமல்ல, சாதியற்ற அனைவரையும் ஒடுக்குவதுதான். அதற்கான முன்னோட்டம்தான் இச்சட்டம். அறிவுக்கு பொருத்தமில்லாத வாதங்களை செய்வதில் பாஜகவை மிஞ்சக் கூடியவர்கள் யாரும் இல்லை “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்! சென்னையில் பரபரப்பு