சென்னை நங்கநல்லூர் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து, பெரும் தொகைக்கு சிலர் விற்பனை செய்வதாக இளையராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் குழு நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
அதன்பின் விசாரணை குழு அளித்த அறிக்கையில், நங்கநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யும் கும்பலுக்கு, உடந்தையாக பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜன் இருப்பதாகவும், அப்பகுதியில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாக புகைப்பட ஆதாரங்களோடு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிக்கைத் தாக்கல் செய்தார். அதில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் அப்பகுதியினரை மிரட்டுவதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.