சென்னை: தன் மீது பாலியல் புகார் தெரிவித்த கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுசி கணேசன் புகாரால் லீனா மணிமேகலைக்கு நேர்ந்த சிக்கல்
எனினும், அவதூறு வழக்கு விசாரணையை காரணம் காட்டி லீனா மணிமேகலைக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது என மண்டல பாஸ்போர்ட் அலுவலரிடம் சுசி கணேசன் புகார் அளித்திருந்ததால், பாஸ்போர்ட் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால், தனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டுமெனக்கோரி, லீனா மணிமேகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி இன்று பிறப்பித்த உத்தரவில், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!