சென்னை:கடந்த 1960ல் ராஜஸ்தானில் பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பின்னர், பொறுப்பு நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு 2021 நவம்பர் 22 பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். பின்னர், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு இன்று 62 வயது நிறைவடைவதை அடுத்து, இன்று செப்டம்பர் 12 மாலையுடன் ஒய்வுபெறுகிறார். அவர் விசாரித்த வழக்குகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா? மதம் முக்கியமா? என கேள்வி எழுப்பியது, அரசு நிலங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக வைத்து அறிவுரை கூறியது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது ஆகிய வழக்குகள் மிக முக்கியமானவையாகும்.
மேலும் நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைக்க உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என உத்தரவிட்டது, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினி மனுவை தள்ளுபடி செய்தது உள்ளிட்டவை முக்கிய வழக்குகள்.