சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு விண்ணப்பத்துக்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த ஆணையை மீறும் வகையில் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், அதன் செயலாளர் கே. கண்ணையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பட்டியலின, பழங்குடியின மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் கல்லூரிகள் வசூலிப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், கட்டணம் வசூலித்த குருநானக் கல்லூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசாணைகளுக்கு விரோதமாக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட கல்லூரி, அரசாணைகளுக்கு முரணாக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசும், குருநானக் கல்லூரியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் குறித்து வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு!