சென்னை: கரோனா சிகிச்சையில் உள்ள நபர்களில் 94.8% நபர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் உள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் கோவிட்-19 பாதிப்பு குறித்து உரையாடுவதற்கான காணொலிக் கூட்டம் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஜன.28ஆம் தேதியான இன்று நடைபெற்றது.
அமைச்சர் விளக்கம்
அந்தக் காணொலியில், தமிழ்நாட்டிற்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி ஆகியவை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள மருத்துவக்கட்டமைப்பு, தடுப்பூசி நிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், இது குறித்து அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , 'தமிழ்நாட்டில் ஜன.27 வரை 2,13,534 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தினசரி தொற்றுப் பாதிப்பு 28,000-க்கும் கீழ் வரத் தொடங்கியுள்ளது.
நோய் சிகிச்சையில் உள்ளவர்களில் 94.8 % நபர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.
5.2% நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை முதலியன நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
படுக்கை வசதிகள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1,33,246 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 42,660 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ளன. அவற்றில் 10% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் 10,147 ஐசியூ படுக்கைகள் உள்ளன. அவற்றில் 11% மட்டுமே உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தியவர்கள்
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 18 வயதுக்கு மேல் 5.78 கோடி நபர்கள் உள்ளனர். 27.1.2022 வரை, தமிழ்நாட்டில் 9,38,82,099 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.