சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 6) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று காலை 6 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
இக்கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6.00 மணிவரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு
கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள், சந்தைப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே கரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்து வருகிறது.
மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கரோனா விதிமுறைளைப் பின்பற்ற கோரிக்கை
மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.