சென்னையில் கல்லிரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஜஸ்பிர் சிங் என்பவருக்கு, அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர் தன் கல்லீரலை தானம் வழங்க முன் வந்தார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய ஆவணங்களை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.
அதை பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், நரேஷ்குமார் கல்லீரல் தானம் வழங்குவது அவரது சகோதரருக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரது சகோதரர் மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கடிதத்தின் வாயிலாக அம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி வைத்தது. அந்த புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கும் அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து, ஏற்கனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி, உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.