சென்னையில், 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்துகோரி 2014இல் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக மனைவி தனியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்றும், 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்திருப்பதால், திருமண உறவு பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தை பாக்கியத்திற்காக பல மருத்துவ சோதனைகளை மேற்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும், நியாயமான செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடியதாக மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.