தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2021, 5:13 PM IST

ETV Bharat / city

கோயில்களுக்கு வரும் பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தொடர்பாக ஸ்டாலினுக்கு கடிதம்!

அறநிலையத் துறை கோயில்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கும், கைக்குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்கும் சிறப்புச் சலுகைகள் தொடர்பாக சமம் அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலினும் கோவிலும், ஸ்டாலின், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் உபகுழு
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். சுப்ரமணி ஆகியோர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை இன்று (ஜூலை 12) அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண்களை தெய்வமாகிப் பூஜித்துவரும் நாட்டில், இத்தனை ஆண்டு காலமாகப் பெண்களை பூஜை செய்ய அனுமதிக்காமல் இருந்தது மாபெரும் சமூக அநீதி.

முதலமைச்சருக்குப் புகழாரம்

இதனைத் தங்கள் (மு.க. ஸ்டாலின்) தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் போக்கி, பெரும் வரலாற்று அநீதியைத் துடைத்தெறிந்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், சமம் உபகுழு சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பையும் மனதார வாழ்த்திப் பாராட்டுகிறோம். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட, பல்வேறு நல்ல திட்டங்களை, அதுவும் குறுகிய காலத்தில், தங்கள் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கும் எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்று கோரிக்கைகள்

இந்து அறநிலையத் துறையில் இதுவரை கண்டுகொள்ளப்படாத, அவசியம் செய்து தரவேண்டி மூன்று கோரிக்கைகளையும் தங்கள் முன்வைக்கிறோம்.

1.இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள, அதிக மக்கள் கூடும், குறிப்பாக, திருவிழாக் காலங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, கடவுளை வணங்கிச் செல்லும் கோயில்களில், ஆண் பெண் இருபாலருக்கும் தனித் தனி வரிசைகள் இருக்கின்றன.

ஆனால், கர்ப்பிணிகளும், கைக்குழந்தையோடு வருவோரும், பெண்களோடு பெண்களாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. இதனைத் தங்கள் அரசு போக்கி, கர்ப்பிணிகளையும், கைக்குழந்தையோடு வருவோரையும் சிறப்பு விருந்தினர்கள் செல்லும் பாதையில் அனுமதித்தால் உடனடியாக தரிசனம் முடித்துவிட்டுத் திரும்புவார்கள்.

இதனால் பல இன்னல்கள் அவர்களுக்கு வராமல் தவிர்க்க முடியும். இதற்கு அரசின் ஆணை மாத்திரம் போதுமானது. பல நூறு ஆண்டுகளாக இந்தப் பிரிவினர் அனுபவித்துவரும் இன்னலைப் போக்கிவிட முடியும்.

பெரும் சேவையாகவும்

2.அனைத்துக் கோயில்களும் மதியம் 12 மணிக்கு நடையைச் சாத்தினால், மாலை 4 மணிக்குதான் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

இடைப்பட்ட நான்கு மணி நேரத்தில், அதிக கூட்டம் நிறைந்த கோயில்களுக்கு வரும் கர்ப்பிணிகளும், கைக்குழந்தையோடு வருவோரும் படும் இன்னல்கள் ஏராளம்.

அவர்களுக்கு என்று கழிப்பறை வசதியுடன்கூடிய காத்திருக்கும் அறைகளை கட்டிக் கொடுத்தால், தங்கள் அரசு பெரும் சேவையை பெண்களுக்கு ஆற்றியதாக அமையும். அதிக வருவாய் உள்ள கோயில்களில்தான் இதனை செய்து தரக் கோருவதால், அரசிற்கு நேரடியாக செலவு இல்லை. கோயில் நிதியிலிருந்து இவற்றைச் செய்திட முடியும்.

கோயில் நூலகப் பராமரிப்பு

3. மக்கள் அதிகமாகக் கூடும் சுமார் 150 கோயில்களில் ஏற்கனவே நல்ல நூலகங்கள் உள்ளன. பல அரிய நூல்களும் உள்ளன. இப்படி நூலகங்கள் இருப்பதே பொதுமக்களுக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை.

மேலும் அந்த நூலகங்களின் பராமரிப்பு, கோயில் ஊழியர்களிடமே உள்ளது. நூலகக் கல்வி படித்தவர்களை அதற்கு நியமனம் செய்வதும் இல்லை. அதனால் அந்த நூலகங்களை அவர்களுக்குப் பராமரிக்கத் தெரியவில்லை.

மேலும், நூலகப் பராமரிப்புப் பணிகள் தெரியாமையால், நூலகத்தை கவனிக்க நியமிக்கப்படும் ஊழியர்கள், "தங்களுக்கு இது தண்டனைப் பணி" என்று கருதும் நிலையும் உள்ளது என்பதையும் தங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

எனவே, கோயில் நூலகங்களின் பராமரிப்பை தமிழ்நாடு அரசின் நூலகத் துறையிடம் ஒப்படைத்தால் எந்தக் காரணங்களுக்காக இந்த நூலகங்கள் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவுசெய்வதாக அமையும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை

நூலகங்களின் செலவுகள் இப்போது உள்ளதுபோல் அந்தக் கோயில்கள் வசமே இருக்கலாம். இந்த நூலகங்களிலும் பெண் வாசிப்புக்கு என்று தனி அறைகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இல்லையெனில், பெண்கள் இதனைப் பயன்படுத்திட இயலாமல் போகும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

இந்தக் கோரிக்கைகள் அதிகம் செலவு பிடிக்காத அதேசமயம் பெண்களுக்கு மிகுந்த நன்மை தரக்கூடிய கோரிக்கைகள். எனவே, தங்கள் தலைமையிலான அரசு மேற்கண்ட கோரிக்கைகளைச் செய்துதரும் என்ற மனப்பூர்வமான நம்பிக்கையோடு தங்கள் முன் வைக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மேகேதாட்டுவில் அணை கட்ட விட மாட்டோம்' - ஸ்டாலின் உறுதி

ABOUT THE AUTHOR

...view details