தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள் உங்களையா? பிரபாகரனையா?' - சீமானுக்கு ஒரு கடிதம்

‘நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே... இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

சீமான்
சீமான்

By

Published : Nov 27, 2019, 11:46 AM IST

Updated : Nov 27, 2019, 12:12 PM IST

வணக்கம் சீமான்,

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் கொண்டிருக்க, நான் உணவு உட்கொண்டிருந்தேன். என் பின்னால் இருந்து ஒருவர் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். என்ன குறிப்பெடுக்கிறாய் என நான் கேட்க, அவரோ நீங்கள் என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என குறிப்பெடுத்து அண்ணனுக்கு அனுப்ப வேண்டும் என சொன்னார் ” என பேசியிருந்தீர்கள்.

நல்லது. நீங்கள் ஈழம் சென்றிருப்பதாகவும் தேசியத் தலைவரை சந்தித்திருப்பதாகவும், அவருடன் ஆமைக்கறி, இறால் என பலவகையான உணவு சாப்பிட்டிருக்கிறேன் எனவும் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்க, நீங்கள் அவரைப் பார்த்து அவரது அருகிலிருந்து உணவு உண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

சீமான்

ஆனால், உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். ஏதோ ஒரு நேர்காணலில், சீமான் என்ற ஒருவன் வந்த பிறகுதான், தீவிரவாதி என்று சித்தரிக்கப்பட்டிருந்த பிரபாகரன் - பலருக்கு அண்ணனாகவும், பெரியப்பாவாகவும் தெரிகிறார் என்று கூறினீர்கள். எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா இது...? நீங்கள் பிரபாகரனை முன்னெடுப்பதற்கு முன்னரே அவரை வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அண்ணனாகவும், தம்பியாகவும் முன்னெடுத்து இருக்கிறார்கள் சீமான்.

நீங்கள் செய்வது நல்ல விஷயம்தான். தற்போதைய தலைமுறைக்கு பிரபாகரனைக் கொண்டு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்தான். ஆனால், அதை எந்த முறையில் செய்கிறீர்கள் என ஒன்று இருக்கிறதல்லவா? ஏதோ ஒரு நாட்டின் அரிசிக் கப்பலை நடுக்கடலில் விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினார்கள், அந்த கப்பலில்தான் என்னை சுட்டுப் பழகுமாறு பிரபாகரன் கூறினார் என பல்வேறு கதைகள் பேசுகிறீர்கள். அது உண்மையா, பொய்யா என்பதற்குள் வர விரும்பவில்லை.

ஆனால், விடுதலைப் புலிகள் சண்டையின்போதுகூட சிங்களவப் பொதுமக்களை கொன்றதில்லை. அங்கிருந்து சிறுதுரும்பைக்கூட கொள்ளையடித்ததில்லை. அவர்களுடைய தாக்குதல் முழுவதும் இலங்கை ராணுவத்தின்மீது மட்டுமே இருந்தது. அப்படியிருக்கையில் கப்பலை தடுத்து நிறுத்தினார்கள் என்று நீங்கள் கூறுவதன் மூலம், மாபெரும் அறத்தோடு போராடிய இயக்கம்... மற்றொரு நாட்டின் அரிசியை பறித்துக்கொண்டதே என்ற எண்ணம் தற்போதைய தலைமுறைக்கு வராதா?

சீமான்

அதுமட்டுமின்றி, விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் என்று பலர் கூறினார்கள். ஆனால், ஏன் அந்த இயக்கம் மற்றொரு நாட்டின் அரிசியைப் பறித்துக்கொண்டது? அந்தளவுக்கா அங்கு பஞ்சம் நிலவியது? பிறகு என்ன புலிகள் சிறந்த நிர்வாகிகள் என்று சந்தேகம் எழாதா? 'எழாது' என்று நீங்கள் கூறலாம். எழவில்லை என்றால் சந்தோஷம். அப்படி எழுந்துவிட்டால்... அது அந்த இயக்கத்திற்கு நாம் வாங்கிக் கொடுக்கும் அவப்பெயர் அல்லவா. அதனால்தான் இதைக் கேட்கிறேன்.

முக்கியமாக, நீங்கள் பிரபாகரனைப் பற்றியும், விடுதலைப் புலிகளைப் பற்றியும் பேசும்போதெல்லாம், “நான் ஈழம் செல்லும்போது விடுதலைப் புலிகள் எனக்கு அப்படி வரவேற்பு கொடுப்பார்கள். நான் பிரபாகரனுடன் அப்படி இருந்தேன். நான் அவருடன் சாப்பாட்டில் பந்தயம் வைத்து சாப்பிட்டேன். என்னுடைய பேச்சை, இன்னொரு படை என பிரபாகரன் கூறினார்” என ‘நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே... இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்?

தேசியத் தலைவர் பிரபாகரன்

உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஆனால், நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அவர்களிடம் உங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே உங்கள் எண்ணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை சீமான். நீங்கள் முழுநேர அரசியல்வாதியாக மாறி, தேர்தலைச் சந்தித்து வாக்கு வங்கிகளையும் உருவாக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். அதனால்தான் இந்த சந்தேகம் எழுகிறது.

இறுதிப்போர் சமயத்தில் உங்களை விடுதலைப் புலிகள் அழைத்ததற்கான காரணம், அங்கு நீங்கள் போராட்ட ரீதியாக என்ன பேசிக்கொண்டீர்கள் என்றாவது நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும் அல்லவா... அதை ஏன் மறக்கிறீர்கள்..?

பிரபாகரனுடன் சீமான்

விடுதலைப் புலிகள் தலைவரை நீங்கள் சந்தித்ததற்கான ஆதாரமாக ஒற்றை புகைப்படம் மட்டும்தான் இருக்கிறதா; வேறு எதுவுமே இல்லையா? என்று உங்களிடம் கேட்கலாம். ஆனால், நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் நிஜமாக இருந்து, நீங்கள் வேறு ஆதாரங்களைக் கொடுத்தால் உங்களை மட்டுமில்லை, தேசியத் தலைவரையும் சந்தேகப்பட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி எழுந்துவிடும் என்பதால் பெரும்பாலானோர் உங்களிடம் அதுகுறித்து கேட்பதில்லை.

தம்பிகளிடம் தமிழீழ தேசியத் தலைவர் குறித்து பேசுங்கள். கண்டிப்பாக பேச வேண்டும். ஏனெனில், பிரபாகரனை யாரும் மறந்து விடக்கூடாது. அவரைப் பற்றி முழுமையாக தற்போதைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒன்று, அது உண்மையாக இருக்க வேண்டும். அதைத்தான் தேசியத் தலைவரும் விரும்புவார். நீங்கள் அவர்களிடம் பேசுவதைப் பார்த்தால், பிரபாகரனை நீங்கள் மட்டும்தான் சந்தித்திருக்கிறீர்கள், தமிழீழம் பெற்றுத் தரும் பொறுப்பை உங்களிடம் மட்டுமே அவர் விட்டுச்சென்றிருக்கிறார் என்பதுபோல் தோற்றமளிக்கிறது. ஆனால் அது உண்மையில்லையே சீமான்.

சீமான்

முக்கியமாக, நீங்களும், உங்களது தம்பிகளும் பார்ப்பவர்களையெல்லாம் வந்தேறிகள் என்கிறீர்கள். ஏன் இந்த பாகுபாடு? பிரபாகரனேகூட இதை விரும்பமாட்டார். பிரபாகரனின் ராஜகுருவான ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கத்திற்கும் தமிழீழத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆனால், அவர் போராடவில்லையா? பிரபாகரனுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவில்லையா? அவரை பிரபாகரன் ஒதுக்கியா... வைத்தார்? நீங்கள் வந்தேறி எங்களுக்கு உங்கள் ஆலோசனை வேண்டாம் என்று அலட்சியப்படுத்தினாரா...? இல்லையே சீமான்!

மிக முக்கியமாக, தமிழகத்தைச் சீரழித்தது திராவிட கட்சிகள்தான் என்று கூறும் உங்கள் தம்பிகளிடம், இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வாங்கித் தந்தது, ஒரு திராவிடக் கட்சியின் தலைவன்தான் என்பதையும், தனி ஈழத்துக்கு ஆதரவுகோரி தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தது, இப்போது வந்தேறி என்று பெயர் வாங்கியிருக்கும் பெரியாரைத்தான் என்பதையும் உங்கள் தம்பிகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.

தந்தை பெரியாருடன் தந்தை செல்வா

பிரபாகரனுக்கு சாதி என்பதே பிடிக்காது சீமான். அவர் தனது இயக்கத்தில் யாரையும் சாதிய ரீதியாக பிரித்ததில்லையே? ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் தம்பிகள் அனைவரையும் சமூக வலைதளத்தில் சாதிய ரீதியாகப் பிரிக்கிறார்களே... அதை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்? எது தடுக்கிறது உங்களை? நீங்கள் வாங்கும் வாக்குகளா? அப்படிப் பார்த்தால் பிரபாகரனை நீங்கள் வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்களா? அப்படி நீங்கள் பயன்படுத்தினால், அதைவிட அவருக்கு செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்காது.

உணர்வுக்கும் உணர்ச்சிப்பூர்வத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீண்ட காலமாக தமிழ் மொழி பேசி, தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வருபவர்களை சாதிய ரீதியாகப் பிரித்து, நீங்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாது... வந்தேறிகள் என்று சொல்வதற்கான அதிகாரத்தையும், உரிமையையும் உங்களுக்கும், உங்கள் தம்பிகளுக்கும் யார் கொடுத்தது? இதை பிரபாகரனோ, தமிழீழ மக்களோ ரசிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

சீமான்

பெரியாரிய மேடைகள் ஏறினீர்கள், நாத்திகம் பேசினீர்கள்... பிறகு முப்பாட்டன் முருகன் என்று சொல்லி அவருக்கு காவடி தூக்கினீர்கள். சரி, முருகன் தமிழரென்றால் அவருடைய தந்தை சிவனும், அண்ணன் பிள்ளையாரும் தமிழர்களா என்று கேட்டால், நீ முதலில் தமிழனா என்று பதில் கேள்வி விழுகிறது. கேள்வி கேட்பதற்குக்கூடவா இங்கு தமிழன் என்ற அடையாளம் வேண்டும்?

ஆம். தமிழன் மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால், இதற்குப் பெயர் சர்வாதிகாரம் இல்லையா சீமான்? “தனித்தமிழ் ஈழம் அமைந்தால் அது சோஷலிஸ நாடாக இருக்கும்” என கூறிய பிரபாகரன் இந்த சர்வாதிகாரத்தை நிச்சயம் விரும்ப மாட்டார்.

பிரபாகரன்

பிரபாகரனை ஒரு சாகசவாதியாக மட்டுமே, நீங்கள் தற்போதைய தலைமுறைக்குக் கொண்டு செல்கிறீர்கள். அதைவிடவும் அவரின் அரசியல் பார்வையையும், அவரின் சித்தாந்தத்தையும் கொண்டு செல்வது மிக அவசியம். எப்போது உணர்வீர்கள் சீமான்?

ஏனெனில், “தமிழர்களிடத்தில் ஒரு குணம் இருக்கிறது. யாராவது ஒருவர் பின்னால் மொத்தமாக அணி திரண்டு வந்து, அவரே காப்பாற்றுவார் என நம்புவது. ஆனால் அது அப்படி அல்ல, மக்கள் போராட்டமே வெல்லும். நான் சாகசவாதியல்ல... என் இன விடுதலைக்காகப் போராடும் ஒரு சாதாரண விடுதலைப் போராளி மட்டுமே” என்று பிரபாகரனே கூறியிருக்கிறார். அதையெல்லாம் படிக்கச் சொல்லுங்கள் உங்கள் தம்பிகளிடம். நீங்கள் சிறந்த முதலமைச்சராக வருவதற்கு முன், ஒரு கட்சியின் மிகச்சிறந்த பக்குவப்பட்ட தலைமையாக மாறுங்கள்.

“நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்” இது நான் கூறவில்லை. தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் கூறியது. இதனை நினைவில் வைத்து சாகசக் கதைகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

சீமான்

அனைவரும் இங்கு மனிதர்கள்தான் சீமான். உங்கள் பார்வையிலும், உங்கள் தம்பிகள் பார்வையிலும் வேற்று இனத்தவர்களாகத் தெரிபவர்கள், உங்களது லட்சியப் பயணத்துக்கு உதவ வந்தால் அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். யாரும் வரவில்லை என்று பொத்தாம்பொதுவாக சொல்ல வேண்டாம். இப்படி இனம் வாரியாகப் பிரித்து பேசிக்கொண்டிருந்தால் யார்தான் அருகில் வர விரும்புவார்கள்? ஏன், இந்தக் கடிதத்தை இன்று எழுதுகிறேன் என்றால், இன்று மாவீரர்கள் தினம். இனியாவது சாகசக் கதைகளை நிறுத்தி அந்த மாவீரர்களின் தியாகத்தை, வீரத்தை தம்பிகளிடம் சொல்ல ஆரம்பியுங்கள். அதுதான் அறம்.

வேண்டாம், கடிதத்தின் வரிகள் உங்களின் கதைகள் போல் நீண்டு கொண்டே செல்கின்றன. கடைசியாக ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன், எதற்கு இவ்வளவு சாகசக் கதைகள்? அதன் மூலம் தற்போதைய தலைமுறையிடம் யாரை நீங்கள் முன்னிலைப்படுத்துகிறீர்கள் உங்களையா? பிரபாகரனையா?

இப்படிக்கு

தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் அக்கறையும், உணர்வும் உள்ளவன்...

Last Updated : Nov 27, 2019, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details