தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப மாவீரர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை : தமிழீழ நாட்டின் மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டிய ஒரு மாபெரும் கடமை உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Lets commit ourselves on Heroes Day to build a nation for Tamils - Seeman
தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப மாவீரர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை

By

Published : Nov 27, 2020, 8:03 PM IST

இது தொடர்பாக அவர் ( நவ.27) இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன மாவீரர்களின் மகத்தான தியாக நாள். இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.

உலக வரலாறு எத்தனையோ மாவீரர்களைத் தியாகச் சீலர்களைத் தனது பெரும் பயணத்தில் கண்டிருக்கிறது. ஆனால், தமிழர்களின் தாய் நிலமான தமிழீழத்தில், தாய்மண் விடுதலைக்காகத் தோன்றிய நம் மாவீரர்கள் போல இதுவரை இந்த உலக வரலாறு யாரையும் கண்டதில்லை. உயிர்போகும் எனத் தெரிந்தும் உவகைப் பெருகும் உள்ளத்தோடு, புன்னகை மாறாத முகத்தோடு, கண்களில் சுமக்கும் லட்சியத்தோடு, நச்சுக்குப்பிப் பின்னப்பட்ட கயிற்றையே பதக்கமாக அணிந்து எதிரியின் கோட்டையினை மண்ணோடு மண்ணாகத் தகர்த்து, தங்கள் புகழை இந்தப் புவியில் விதைத்துக் காற்றில் கலந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்.

இதுவரை இந்தப் பூமிபந்து சந்தித்திராத அறம் வழி நின்று மறம் கற்பித்த பெரும் புகழ் சான்றோன் எங்கள் தேசியத் தலைவர் என் உயிர் அண்ணன் மேதகு வே. பிரபாகரனால் படிப்படியாய் உருவாக்கப்பட்டு, எந்தக் கொடும் சூழலிலும், மாறாத மனஉரம் நிறைந்த மனிதர்களாக ‌ உருவாகி விடுதலை வேட்கையோடு சிங்கள இனவாத அரசின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழீழ தேசத்தை மீட்க வந்த மண் மீட்பு புரட்சியாளர்கள்தான் எங்கள் மாவீரர்கள்.

உலக நாடுகளின் படை அணிகளில் எத்தனையோ படையணிகள் உண்டு. அலையலையாய் அணிவகுத்து நிற்கிற வீரர்களின் எண்ணிக்கை உண்டு. அங்கே அணிவகுத்து நிற்கிற அனைத்து வீரர்களும் உயிர் காக்க கவசம் அணிந்து, நவீன உடைகள் அணிந்து, உயிர் பாதுகாப்பு எண்ணத்தோடு வரிசையில் நிற்கிறார்கள். ஆனால், எங்கள் மாவீரர்களோ தன் இனத்தின் விடுதலைக்காகத் தங்களின் உயிர்தான் விலை என்பதை உணர்ந்து, அந்த உயிரைக் கொடுத்தால்தான் அதனையும் தாண்டிய விடுதலை கிடைக்கும் என்பதைப் புரிந்து தாய்மண் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை இழக்கப் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.

எம் மாவீரர்களின் வீரம் இதுவரை இந்த உலகம் அறியாதது. பெரும்புகழ் கொண்டது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் ராணுவப் பலத்தையே சுக்கு நூறாக உடைத்தெறிந்து காட்டியவர்கள் எங்கள் மாவீரர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள இனவாத அரசின் ராணுவக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து மக்களைப் பாதுகாக்க களத்திலே நின்றவர்கள் எங்கள் மாவீரர்கள்.

மாவீரர்களின் வீரத்தை அறிந்த சிங்கள இனவாத அரசு உலகம் முழுக்க ஓடி ராணுவ உதவிக்காகக் கையேந்தி நின்றதை நாம் கடந்த காலத்தில் கண்டோம். உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு உள்ளங்கை அளவு நாடாக இருந்தாலும் வீரத்திலே உயர்ந்து நின்ற எங்கள் தாய் நாடான தமிழீழ நாட்டைப் பாதுகாத்த எமது தேசிய ராணுவமான விடுதலைப் புலிகளை எதிர்த்து நின்றன.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போதுகூட பயன்படுத்தக்கூடாத தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கொத்து எரிகுண்டுகள், நச்சு வாயுக்கள் என அனைத்தையும் பயன்படுத்தி எங்கள் தாயக விடுதலைப்போராட்டத்தை சிங்கள பேரினவாத அரசும், உலக வல்லாதிக்க நாடுகளும் தற்காலிகமாக முறியடித்து இருக்கின்றன.

இந்த உலகில் வாழ்கின்ற தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் 12 கோடி மக்களின் விடுதலைக்கோரிக்கையை உலக அரங்கு எந்த நியாயமுமின்றிப் புறக்கணித்து இருக்கிறது. எம் தமிழ் ஈழ நாட்டில் கடந்த 2009ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கான விசாரணையை முன்னெடுக்க எந்தவொரு நாடும் ஆதரவுக்கரம் நீட்டாதது வேதனையானது . சமகாலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் விடுதலை கேட்டுப் போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை இந்த உலகத்தில் இருக்கின்ற எந்த ஒரு நாடும் கண்டு கொள்ளக்கூட இல்லை.

தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக நம் இன மக்கள் லட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாய் கொலை செய்யப்பட்டபோதுகூட அமைதி கலைக்காத இந்த உலகம் நமக்கென எப்படி நீதி செய்யும் என்கின்ற கேள்வி தமிழர்களாகிய எங்கள் மனதில் எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இன அழிப்பு முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், ஐ.நா. மன்றம் இதை ஒரு விசாரணையாகக்கூட எடுக்க மறுத்து புறந்தள்ளி வருகிறது. ஒரு இனப்படுகொலையைப் போர்க்குற்றம் எனவும், மனித உரிமை மீறல் எனவும், குறுகிய வட்டத்தில் அடைத்து எமது விடுதலைப் பாதையை உலக அரங்கு தடுத்து வருகிறது.‌

தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன், தமிழீழ சோசலிச குடியரசு நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்பி உலக அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தார். நமது ஈழப்பெரு நாட்டில் முப்படைகளும் கட்டியெழுப்பப்பட்டு, சட்டத்துறை, காவல்துறை பொதுப்பணித்துறை என அனைத்துக் கட்டமைப்புகளும் நிறுவப்பட்டு முழு விடுதலை நாடாக அறிவிப்பதற்கான தகுதியைப் பெற்றுத் தமிழீழத்தேசம் தயாராக இருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள இனவாத அரசு உலக நாடுகளுடன் சேர்ந்து எம் தலைவர் கனவுகண்டு எழுப்பிய தேசத்தை ராணுவப் பலத்தைக் கொண்டு அழித்தொழித்தது. லட்சக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பல லட்சக்கணக்கில் உடல் ஊனம் அடைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். பல்லாயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால், இதையெல்லாம் மண்மூடி சிங்களப் பேரினவாத அரசு தந்திரமாக மறைத்து வருகிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற தாயகத் தமிழகம் இடம் பெற்றிருக்கின்ற இந்திய ஒன்றிய அரசு, சிங்கள இனவாத அரசுக்குத் துணை போவதுதான் இங்கு வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழ்கின்ற தமிழர்களுக்கு மிகப் பெரிய மன வலியைத் தருகிறது.

எதிர்காலத்தில் இந்திய நாட்டின் தவறான வெளியுறவு கொள்கை மாறுவதற்கான அரசியலை தாயகத் தமிழகத்தின் மக்கள் திரள் அரசியல் கொண்டு நிகழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தமிழர் என ஒவ்வொரு வீதியிலும் இளைஞர்கள் இன்று தாயகத் தமிழ்நாட்டில் திரளத் தொடங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றில் வீதிகளில் யூதர்கள் எவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு, பிறகு மாபெரும் மீளெழுச்சி கொண்டு தொடர்ச்சியாகப் போராடி தங்களுக்கென ஒரு நாட்டினை அடைந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் வரலாற்றின் பாதையில் ஒரு மீள் எழுச்சி கொள்ளவேண்டிய ஒரு தேசிய இனமாக இருக்கிறோம். உலக அரசியல் ஒழுங்குகள் இன்று மாறிவிட்டன. கடந்த 2009க்கு பிறகு உலக அரசுகளின் அரசியல் போக்குகள் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கணக்கெடுத்து நமது உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், பாலஸ்தீனம் என்றெல்லாம் புதிய நாடுகள் தோன்றிய வரலாறு நம் கண் முன்னால் பாடங்களாக இருக்கின்றன. பெரும் நம்பிக்கையோடு, திட்டமிடலுடன் கூடிய அறிவார்ந்த முறைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழர்களுக்கென இந்தப் பூமிபந்தில் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் பிறக்கும் என்பது உறுதி.

விடுதலைக் கனவை நோக்கிய நமது பாதையில் நமது மாவீரர் தெய்வங்கள் ஒளிதரும் விளக்குகளாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுவாசித்த மூச்சுக் காற்றைத்தான் அவர்களது உடன்பிறந்தவர்களாகிய நாமும் சுவாசிக்கிறோம் என்கின்ற உணர்வு மீண்டும் எழுவதற்கான மாபெரும் சக்தியை நமக்கு வழங்குகிறது.

அழித்தொழிக்கப்பட்ட நமது அன்னை நிலமான தமிழீழ நாட்டினை, மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவு தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் கடமை இன்று உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும் மாவீரர்களின் தியாகமும் அவர்கள் சிந்தியக் குருதியும் நம் நினைவில் தாயக விடுதலைக் கனவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அந்த மகத்தான கடமையை உணர்ந்து தமிழின இளையோர் தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்டு இறையாண்மையுடன் கூடிய தமிழர்களுக்கென ஒரு விடுதலைத்தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாய் அனைவரையும் இந்தப் புனித நாளில் அன்போடு அழைக்கின்றேன்” என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :மேதகு 66 : தமிழினத்தின் தாயுமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

ABOUT THE AUTHOR

...view details