தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து; மத்திய அரசுக்கு கண்டனம்!' - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து

சென்னை: காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 9, 2019, 6:23 PM IST

காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய கே. பாலகிருஷ்ணன், “மாநிலங்களுக்கு இருக்கின்ற எல்லா உரிமைகளையும் பறித்து, இன்னும் சொல்லப்போனால் மாநிலங்களைக் கூட வேறு சில மாநிலங்களாகப் பிரித்து, மாவட்டங்கள் என்ற நிலைக்குக் கொண்டுவருகின்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறார்கள். மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில்தான், 32 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு

உயர்ந்த உரிமை பெற்றுள்ள காஷ்மீரில் அது முடியாது என்பதால், 370 சட்டப்பிரிவை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, மாநிலங்கள் என்ற அளவில் கூட அல்லாமல், ஒரு நகராட்சி என்ற அளவுக்கு, ஒன்றிய பிரதேசங்களாக மாற்றியிருப்பது காஷ்மீரில் மேலும் கலவரத்தை உண்டாக்கும். என்னதான் மோடி சொன்னாலும், அங்கு அமைதி நிலவப் போவதில்லை.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம். நாளை மாலை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீருக்கான ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details