குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
'கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கியவர். தமிழ்நாடு மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்' - என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் இறப்புச் செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமூக செயல்பாடுகளுக்காகவும் வசந்தகுமார் மேற்கொண்ட முயற்சிகள் மதிக்கத்தக்கவை.
அவருடன் உரையாடல் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் வசந்த குமார் கொண்ட ஆர்வம் வெளிப்பட்டது. அவரின் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுச்செய்தி தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
மேலும் ஒரு வெற்றிகரமான வணிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா கடவுளின் நிழலில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்' ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
"கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்த குமார் கரோனாவால் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறேன். மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் கொள்கை மீது வசந்தகுமார் கொண்ட உறுதி எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 28ல் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.