ராஜீவ்காந்தி தயாரிப்பில், திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:
நடிகர் மகேந்திரன்:இந்த வாய்ப்பு கொடுத்தது திருப்பூர் குமரன். அவர் எனக்கு அண்ணன் அல்ல, அப்பாவிற்கும் மேலானவர். என்னைப் போன்ற பலருக்கு வாய்ப்புக் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். எல்லோரையும் பாகுபாடு பாராமல் ஒரே மாதிரி நடத்துவார். இப்படம் உருவாக முக்கிய காரணம் ஆபா சார் தான். நான் சாதாரண செங்கல் சூலை டிரைவர் தான். என்னிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்தவர் திருப்பூர் குமரன் தான் என்றார்.
நடிகை சோனியா:சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் குண்டான் மலை. இப்படத்தை அனைவரும் குடும்பமாக சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றார்.
நடிகர் அங்கமுத்து:திருப்பூர் குமரன் அதிகம் பேச மாட்டார். ஆனால், நினைத்ததை சாதித்துக் காட்டி விடுவார். அப்படி குறுகிய காலத்தில் உருவான படம் தான் குண்டான் மலை. முன்பெல்லாம் வெற்றிகரமான 6 ஆவது வாரம் என்று வரும். இப்போது வெற்றிகரமான 6 ஆவது நாள் என்று மாறியிருக்கிறது. ஆனால், வெற்றிகரமான 6 ஆவது மணி நேரம் என்றாகிவிடக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.
இப்படத்தில் வயதான பேராசிரியர் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். அவரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடித்திருக்கிறேன். கோபிசெட்டிபாளையம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. எல்லா இடங்களிலும் எங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்தார்கள்.
மலை மீது 2 கிலோமீட்டர் ஒரே ஆளாக அத்தனை பேருக்கும் சாப்பாடும், தண்ணீரும் சுமந்து வந்த மகேந்திரனுக்கு நன்றி. சாப்பாடு செய்து கொடுத்தது இப்படத்தின் கதாநாயகி வெண்மதியின் அம்மா தான், இந்த நேரத்தில் அவருக்கு நன்றி. சிறுசிறு பொருளாதார தடை வந்தாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்குவோம்.
இப்படத்தில் இணை இயக்குநராகப் பெயர் போட்டு வாய்ப்புக் கொடுத்த திருப்பூர் குமரன் அண்ணனுக்கு நன்றி. கவிஞர் ஆபா கூற நான் எழுதினேன். அதேபோல், அனைவருக்கும் வசனங்கள் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இயக்குநர் கொடுத்தார் என்றார்.
இசையமைப்பாளர் தீனா:பான் இந்தியா படங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படம் பான் தமிழ்நாடு படம் போல் இருக்கிறது. சேலம், கோயமுத்தூர், ஆத்தூர் என்று அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நடித்திருக்கிறார்கள். நான் திருடா திருடி படத்தில் பணியாற்றிய குழு போல் இருக்கிறது.
ராஜன் ஏன் உதவி செய்கிறார் என்றால், அவர் பசியை நன்றாக அறிந்தவர் என்பதால் தான். படங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் டிக்கெட் விலையில் 120 ரூபாய் என்றில்லாமல், 60 ரூபாய் என்று ஸ்லேப் சிஸ்டம் செய்து கொடுத்தால் அனைவரும் சென்று பார்ப்பார்கள்.
ஜாகுவார் தங்கம்:1,500 படங்களுக்கு இசையமைத்த முதல் மனிதர் சங்கர் கணேஷ். 130 திரையரங்கில் வெளியிடுகிறோம் என்று கூறி 13 திரையரங்கில் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறையில் இருப்பவர்களையே ஏமாற்றியிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.