சென்னை:நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உலகம் போற்றக்கூடிய ஒரு நடிகர். உலகத்தில் எந்த ஒரு நடிகரும் அவருக்கு இணை இல்லை, அவரை போன்று திரையில் தோன்றியது கிடையாது. அவரை போன்ற ஒரு நடிகர், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக இருந்தது காமராஜரின் மிக நெருக்கமாக இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம்.
தேசியத்தை அவர் திரையில் கொண்டு வந்தவர். இந்த தேசத்தின் வளர்ச்சி எப்படி, சுதந்திரம் எப்படி கொண்டு வரப்பட்டது என்பதை எளிதில் மக்களுக்கு திரையில் எடுத்துக் கூறினார். அவர் புகழ் ஓங்க.. சிவாஜியின் சிலையை மக்கள் பார்வைக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளது போன்று இருந்தது. அதை, தற்போது பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது இந்த அரசு. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
வன்முறையே ஆர்எஸ்எஸ் பின்புலம்:நீதிமன்றத்தின் பார்வையில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. எந்த வகையில் அனுமதி அளிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆர்எஸ்எஸ் வன்முறை பின்புலம் கொண்ட ஒரு அமைப்பு. அந்த வன்முறை காரணமாகத்தான் காந்தி கொல்லப்பட்டார்; பாபர் மசூதி இடிக்கப்பட்டது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பின்பலம் கொண்ட ஒரு அமைப்பு ஊர்வலம் நடத்த நாம் அனுமதிக்கக் கூடாது.