கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க துணைத் தலைவர் ஜெயசீலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மளிகை, காய்கறி, பழம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும். இந்த நடைமுறையை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்கவில்லை என்றால், கடைகளின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துகின்றனர். வருவாய்த் துறையினர் கடைக்கு சீல் வைக்கின்றனர்.
எனவே, சிறுகடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ய சிறு வியாபாரிகள் செல்லும்போது, காவல் துறையினர் தொந்தரவு ஏற்படுகிறது.
அதனால், சிறு வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.