துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக திராவிடர் இயக்கங்களைச் சார்ந்தவர்களும், பெரியாரிய உணர்வாளர்களும் பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தொலைபேசி வாயிலாக பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு, "மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியது அவரது உரிமை. தவறு நடந்துவிட்டால் மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பு.
உண்மைதான் சொல்கிறேன் என்று கூறும் ரஜினி, துக்ளக் இதழை காட்டியிருக்கவேண்டும். 1971ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுக்கு 46 ஆண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு வெளிவந்த மற்றொரு இதழின் செய்தியை ஆதாரமாக காட்டியுள்ளார். அதையும் சரியாகக் காட்டாமல் ஏதோ மந்திரவாதி வித்தைக் காட்டுவதைப் போல காட்டுகிறார்.
துக்ளக் இதழையும் அதில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தையும் ரஜினி காட்டியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகளுக்கு பின் வெளியான இதழை ஆதரமாகக் காட்டுகிறார். ஏன் ரஜினி குறிப்பிட்ட அந்த நிகழ்வு நடைபெற்றபோது வந்த துக்ளக்கை ஆதரமாக காட்டவில்லை? யோக்கியமும் நாணயமும் உள்ளவர் அதைத்தானே செய்திருக்கவேண்டும்.
‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி சிலைகளை செருப்பால் அடித்தது என்பது முதல் வினை அல்ல. அது எதிர்வினை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் பெரியாரை நோக்கி வீசப்பட்ட செருப்பை எடுத்து ராமர் சிலை அடிக்கப்பட்டது, அது உண்மை. ஆனால் பெரியார் அடித்தார் என்பது பொய், அது உடையில்லா சிலையாக எடுத்துவரப்பட்டது என்பது பொய். அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்பதும் பொய். இதற்கான ஆதாரங்களை தொலைக்காட்சிகள் பதிவு செய்யும் வரை நிதானமாக ரஜினி காட்டியிருக்க வேண்டும்" என்றார்
இதையும் படிங்க: ’சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ரஜினி வீரர்’ - எஸ்.வி. சேகர் சிறப்புப் பேட்டி