நீலகிரி:கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களை கொள்ளையடித்து சென்றது.
இந்தக் கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையார் மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.
நீதிமன்றத்தில் மறுவிசாரணை
இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.