சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் நல வாரியத்திற்கு, அரசு உடனடியாக போதிய கட்டமைப்பு வசதிகளையும், உரிய நிதி ஒதுக்கீடும் செய்து தர வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
குழந்தைகள் நல வாரியம் குறித்து தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிவெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தமிழ்நாடு குழந்தைகள் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய இந்த முக்கிய அமைப்பு முடங்கியிருப்பது ஆபத்தானது.
இப்பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துவரும் அரசு, இப்பதவிகளுக்கு உரிய கல்வித் தகுதியும், அனுபவமும் பெற்றவர்களை வைத்து நிரப்பாமல், ஆளும் கட்சிப் பிரமுகர்களையும், ஓய்வுப்பெற்ற அலுவலர்களையும் கொண்டு நிரப்ப முயற்சி எடுத்து வருவது, இவ்வாரியம் குழந்தைகள் நலனில் முனைப்போடு செயல்பட உதவாது.
அரசு உடனடியாக, கள அனுபவம் கொண்ட உறுப்பினர்களையும் தலைவரையும் நியமிப்பதோடு, இந்த வாரியம் முழுவீச்சில் செயல்பட ஏதுவாக போதிய கட்டமைப்பு வசதிகளையும், உரிய நிதி ஒதுக்கீடும் செய்து தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.