தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி... திமுகவில் சலசலப்பை உண்டாக்கிய கீதாஜீவன்? - முக ஸ்டாலின்

தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் என எம்.எல்.ஏ. கீதாஜீவன் பேசியிருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

kani

By

Published : Feb 9, 2019, 3:20 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கியமாக எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது, யார்? யார்? எந்த தொகுதியில் களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸுடன் கூட்டணி என்பது 95% உறுதியாகி இருக்கிறது. ஆனால் தொகுதி பங்கீடு எவ்வாறு இருக்கப் போகிறது என திமுகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் இருக்கும் கட்சிகள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸுக்கு ஐந்து முதல் ஆறு தொகுதிகள் கொடுக்க தற்போது எண்ணி இருப்பதாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் கொடுத்துவிட்டு 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என ஸ்டாலின் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக களமிறங்கும் தொகுதிகளில் யார்? யார்? எங்கு போட்டியிட போகிறார்கள் என்பது அக்கட்சியினரிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனக்கு மத்திய சென்னை சீட் வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார் எனவும் அதற்கு ஸ்டாலின் நெகட்டிவ்வான பதிலையே கொடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

இது இப்படி இருக்க கருணாநிதி மறைவுக்கு பிறகு தனக்கு கட்சியில் பொருளாளர் பதவி இல்லாவிட்டால் முதன்மைச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கனிமொழி எதிர்பார்த்ததாகவும் ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பதவிதான் கிடைக்கவில்லை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கனிமொழி இருப்பதாகவும், அதற்கு ஸ்டாலினும் ஒத்துக்கொண்டதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தகவல் வெளியே கசிய வேண்டாம் என தலைமை கட்டளையிட்டதாகவும் பேசப்பட்டது.

இந்த சூழலில்தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவர் மத்திய அமைச்சராவார் என எம்.எல்.ஏ. கீதாஜீவன் பேசினார்.

அவரது இந்த பேச்சை ஸ்டாலின் ரசிக்கவில்லையாம். மேலும், தலைமை அறிவிக்கும் முன்னரே கட்சி உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டிருந்தால் பின்னர் தலைமை என்பது எதற்கு என்ற கேள்வியும் மூத்த தலைவர்களிடையே எழுந்துள்ளதாகவும் தெரிகிறது..

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் தனக்காகவும் பேச ஆட்கள் இருக்கிறார்கள் என கீதாஜீவன் மூலம் கனிமொழி சொல்கிறாரோ? என்ற யோசனையில் ஸ்டாலின் இருப்பதாகவும் உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

யாரும் எதுவாக வேண்டுமானாலும் பேசட்டும் முத்துநகர் தொகுதி தனது முத்தான தங்கைக்குதான் தளபதி அளிப்பார் என கனிமொழி ஆதரவாளர்கள் பேச தொடங்கிவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details