சென்னை:தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், நேற்று (அக்டோபர் 18) மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வில், மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சம்பத், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், "பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் கைது சட்டவிதிப்படி நடக்கவில்லை. 17 முறை ட்விட்டரில் பதிவுசெய்த தகவல்கள் அந்தந்தச் சட்டத்தின் விதிமுறையின்படி கைது நடவடிக்கை நடக்கவில்லை.
மேலும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ் காவல் துறையினரிடம் பேசும்பொழுது காவல் துறை நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்திற்கு உரியது. சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்படும். மேலும் கல்யாணராமனைப் பிணையில் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் சென்றபோது,
- 2018இல் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். (490)
- 2019இல் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். (336)
- 2020இல் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். (60),
- 2020இல் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். (98),
- 2020இல் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். (152)
என இன்று (அக்டோபர் 18) புதிதாக ஐந்து முதல் தகவல் அறிக்கையைக் (எஃப்.ஐ.ஆர்.) கொண்டுவந்து நீதித் துறை நடுவரிடம் காவல் துறையினர் கொடுத்துள்ளனர். இதன் கீழாகவும் கல்யாணராமனை இன்னும் கைதுசெய்யாமல் உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
கல்யாணராமன் குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறார். இந்த வழக்குகள் எல்லாம் குண்டாஸ் போடுவதற்கு முன்பாக உள்ள வழக்குகள். நீதித் துறை நடுவர் பிணை கொடுக்க முன்வரும்போது, புதிதாக ஐந்து எஃப்.ஐ.ஆர்-ஐ காட்டுகின்றனர்.