"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை" என்ற கூற்று உண்டு. ஆனால், சில குறிப்பிட்ட அரசியல் தத்துவங்களுக்கு நிரந்தர எதிரி உண்டு. எப்போதோ துளிர்விட ஆரம்பித்து, இப்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கும் சில அரசியல் தத்துவங்களுக்கு நிரந்தரமான எதிரி ஒருவர் இருக்கிறார்.
அவர் பெயர் மு.கருணாநிதி. கருணாநிதிபோல் எவரேனும் அரசியலில் வன்மத்தையும், வஞ்சத்தையும், எதிரியையும், தோல்வியையும் சந்தித்திருந்தால் அவர் அரசியலின் அடிப்படையைத் தாண்டியிருக்கமாட்டார். ஆனால் அத்தனையையும் எதிர்கொண்டு, ஐந்து முறை முதலமைச்சர் என்ற பதவியில் அமர்ந்தார்.
அதை பதவி என்று சொல்வதைவிடவும், பொறுப்பு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், கருணாநிதி அதை பொறுப்பு என்று பார்த்தார், நினைத்தார், வாழ்ந்தார்.
கருணாநிதி மீது விமர்சனங்களே இல்லையா என்று கேட்டால் இருக்கின்றன. கடவுளையும் விமர்சனத்திற்குள்ளாக்கியவர் மீது விமர்சனம் இல்லாமலா இருக்கும். அவரும் விமர்சனத்திற்கு உள்பட்டவர்தான். ஆனால் விமர்சனத்திற்கு மட்டுமே உள்பட்டவர் இல்லை. அதைதான் இங்கு பலர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் இல்லை; வசதியாக மறக்கிறார்கள்.
அவர் மேற்கொண்ட ஆட்சியைத்தான் இன்று பல மாநிலங்கள் பின் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முக்கால்வாசி இந்தியா, மு.கருணாநிதியைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் இந்தியாவும் அதில் அடக்கம்.
கலைஞரும், தொழில்நுட்பமும்...
ஒரு மாநிலம் முன்னேற சமூக நீதி, கல்வி, தொழில்நுட்பம் அத்தியாவசியம். அதனை முழுதாக உணர்ந்து செயல்பட்டவர் கருணாநிதி. அவரின் கடந்த 1996-2001 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சியில், கணினி அறிவியல் பாடம் பள்ளிகளில் பரவலாக சேர்க்கப்பட்டது.
சமூக நீதியை நிலைநிறுத்த பாடுபட்டுக்கொண்டிருந்த கருணாநிதி, அதேசமயத்தில் தொழில்நுட்பத்திலும், தமிழ்நாட்டை வார்த்தெடுக்க முழு மூச்சாக செயல்பட்டார். மற்ற மாநிலங்கள் சாதாரண பூங்காவைத் திறக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்த சூழலில் கருணாநிதி 340 கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்தார்.
அதுமட்டுமின்றி, பயோ டெக் (உயிரி தொழில்நுட்பவியல்) என்ற வார்த்தையைக் கண்டு மற்ற மாநிலங்கள் ஒதுங்கிக் கொண்டிருந்த சமயத்தில் முதல்முறையாக அவர், தமிழ்நாட்டில் அதற்கான விதையைப் போட்டார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், விவசாயம், உணவு, மருத்துவப் பொருள்களை தயாரித்து உள்நாட்டு சந்தையில் விற்கவும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நோக்கிலும், பெண்களுக்கான உயிரி தொழில்நுட்பவியல் பூங்காவாக அதை உருவாக்கினார்.
அடுப்பறைக்கும், படுக்கையறைக்கும் மட்டும்தான் பெண்கள் என்ற சிந்தனையை இதன் மூலம் எளிதாக உடைத்தெறிந்தார். முக்கியமாக, ஒரு மாநிலம் வெளிநாட்டிற்குப் பொருள்களை அதுவும் உயிரி தொழில்நுட்பவியல் தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்யும் விதமாக, அவர் அதனை உருவாக்கியது எல்லாம் யாராலும் யோசிக்க முடியாதது.
அந்த விதை வீரியமானது. அந்த விதையால்தான் நவீன தமிழ்நாடு பிறந்து, தவழ்ந்து, நடக்க ஆரம்பித்திருந்தது. அதை பிரசவித்து நடை பழக்கிக்கொடுத்தவர் கருணாநிதி. இச்சமயத்தில்தான் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ், நேரில் வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டு சென்றார்.
அதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “பில்கேட்ஸ் என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக வந்திருந்தார்” என்று போகிறபோக்கில் கூறிவிட்டுச் சென்றார்.
பில்கேட்ஸ், கருணாநிதி, தயாநிதி கருணாநிதி இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால், தனது இயல்பை மறந்து இந்த சந்திப்பு குறித்து என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியும். ஆனால் கருணாநிதியால் எப்படி தனது இயல்பான குணத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிந்தது என்று நினைத்தால் ஆச்சரியம் மட்டும்தான் பதிலாக கிடைக்கும்.
கலைஞரும், விவசாயமும்...
இந்த நாட்டின் முதுகெலும்பு என அனைவராலும் கூறப்படும் விவசாயத்தையும், விவசாயிகளையும் உடைந்து போகாமல் பார்த்துக்கொள்ள முதல் முதலில் முனைப்புக் காட்டியவர் கருணாநிதி. தமிழ்நாடு மாணவர்கள் விவசாய பொறியியல் படிக்க தென்னிந்தியாவில் முதல்முதலாக விவசாயக் கல்லூரி ஆரம்பித்தது, நில உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்தது, பம்பு செட் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி என அவர் விவசாயிகளுக்கு அறிவித்த திட்டங்கள் குறித்து பேச, அவரது கடிதங்கள் போலவே பல தொகுதிகள் தேவைப்படும்.
பதவி ஏற்பு விழாவிலேயே விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பில் கையெழுத்திடும் கருணாநிதி. கருணாநிதியின் ஆட்சிக்காலங்களிலேயே கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம் என்று அனைவராலும் கூறப்படுவதுண்டு. அந்த ஆட்சிக்காலம் என்பது கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை என, அவர் இறங்கிய மைதானத்தில் எல்லாம் வளர்ச்சியை அறுவடை செய்தார்.
கலைஞரும், பெண்களும்...
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டம் இயற்றி பெரியாரின் கனவை நிறைவேற்றி சமத்துவத்தை நிலை நாட்டினார். அதுமட்டுமின்றி, கடந்த 1989ஆம் ஆண்டு ஈ.வெ.ரா நாகம்மையார் பெண் கல்வி திட்டத்தை அமல்படுத்தி ஏழை பெண்கள் கல்வி கற்கும் நிலையை உருவாக்கினார்.
இதனால், அடுத்த இரண்டு வருடங்களில் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களின் சதவீதம் 50 சதவீதமாக உயர்ந்தது. காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்றால், அந்த பள்ளியின் கதவுகளை கருணாநிதிதான் பெண்களுக்காக திறந்துவைத்தார்.
அதுமட்டுமின்றி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை கொண்டுவந்து, பெண்கள் பத்தாம் வகுப்புவரை படித்திருந்தால் அவர்களின் திருமணத்திற்கான உதவித்தொகை வழங்கப்படுமென்று அறிவித்ததால் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரையாவது பெண்களை படிக்க கிராமப்புற குடும்பத்தினர் அனுமதித்தனர்.
இச்சமூகத்தில் ஒரு ஆண் மறுமணத்தை மிக எளிதாக செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு பெண் மறுமணம் என்ற வார்த்தையை எடுத்தாலே சொற்களால் அந்தப் பெண்ணை எரிக்கும் சூழல் இருக்கிறது. அதனை துடைத்தெறிய, ஈ.வெ.ரா மணியம்மையார் திருமண உதவித்திட்டம் என்பதன் மூலம் கணவனை இழந்த கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள ஊக்கத் தொகையை வழங்கினார்.
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், பெண்களின் முன்னேற்றத்திற்காக இறுதிவரை போராடிய பெரியாரின் பெயரையே சூட்டி, இதற்கான விதையை அவர் போட்டது என்று சமூகத்திற்கு உணர்த்தினார்.
இதேபோல், இந்தியாவிலேயே முதல்முறையாக காவல் துறையில் பெண்களை சேர்த்தது, அனாதை இல்லங்களில் வளர்ந்த பெண்களுக்கான திருமண உதவி திட்டம், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது என கருணாநிதி, பெண்கள் முன்னேற்றம் சார்ந்த விஷயத்தில் ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்.
இப்படி பெண்கள் விஷயத்தில் கருணாநிதி குறித்து பேச எக்கச்சக்க விவகாரங்கள் கொட்டிக்கிடக்கும் சூழலில், கருணாநிதி குறித்து பேசினாலே, அவர் மூன்று பெண்களை மணந்துகொண்டவர் என்று அவரது அந்தரங்க விஷயங்களில் கூச்சமே இல்லாமல் நுழைபவர்கள் ஏராளமானோர் உண்டு.
அதனையும் அவர் ஜனநாயக ரீதியாக மட்டுமே எதிர்கொண்டார். அவர் மூன்று பெண்களை மணந்தார். ஆனால், அதனை அவர் இந்த சமூகத்திற்கு மறைக்கவோ, அந்த மூன்று பெண்களையும் மறக்கவோ இல்லை.
கலைஞரும், முதல்முறைகளும்...
இந்த உலகத்திலேயே கொடுமையான விஷயங்களில் ஒன்று உணவுக்காக ஒருவர் மற்றொருவரிடம் கையேந்தி நிற்பது. அந்த அவல நிலையை மாற்றுவதற்காக முதல்முறையாக பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தினார். அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் விலக்கு, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று முதல்முறையாக சட்டம் இயற்றியது, முதல்முறையாக குடிசை மாற்று வாரியத்தை அமைத்தது என பல முதல் முறைகளுக்கு கருணாநிதியின் முற்போக்கு சிந்தனை மூலதனமாக இருக்கும்.
கலைஞரும், அவர் மீதுள்ள வன்மமும்...
காமராஜரை தோற்கடித்த மண் என்று ஒரு வாக்கியம் உண்டு. இருந்தாலும், கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆட்சியை கொடுத்த கருணாநிதியை தோற்கடித்த மண் என்றும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை மக்கள் ஏனோ மறந்தார்கள்; இல்லை சிலரால் மறக்க வைக்கப்பட்டார்கள்.
கருணாநிதியின் அந்த பொற்கால ஆட்சியில் கருப்பு புள்ளிகளே இல்லையா என்ற கேள்வி கேட்டால் இருக்கின்றனதான். அதிலும், மாஞ்சோலை படுகொலையை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு போலவே, கடந்த 1980 ஆம் ஆண்டு டிசம்பரில் திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கடந்த 1985இல் மீனவர் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கடந்த 1992இல் கோவில்பட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கடந்த 1994இல் பஞ்சமி நில போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கடந்த 2011இல் பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கடந்த 2018இல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என அனைத்தையும் மறந்துவிட்டு, மாஞ்சோலை படுகொலையை மட்டும் பேசுவது எந்த விதத்தில் அறம்.
அது இறந்துபோன அந்த மக்கள் மீதுள்ள அக்கறையா இல்லை கருணாநிதி மீதுள்ள வன்மமா?
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் போவது மட்டும்தான் உயிர்களா என்ற கேள்வி எழுகிறது. மாஞ்சோலை படுகொலையை நியாயப்படுத்த யாராலும் முடியாது. அதேபோல் பல ஆட்சியாளர்களின் துப்பாக்கிச்சூட்டை மறப்பதையும், யாராலும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்படி செய்தால், அது கருணாநிதி மீதுள்ள வன்மமேயொழிய வேறு ஒன்றுமில்லை.
காமராஜர் அணை கட்டினார்தான் இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக காமராஜர் மட்டுமே அணை கட்டினார் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது. தமிழ்நாட்டு சூழலைப் பொறுத்தவரை ஒருவரை தூற்ற மற்றொருவரை போற்றுவது காலங்காலமாக இருக்கிறது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 29 அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதை ஏன் இங்கு யாருமே பேசுவதில்லை.
கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய பெயர் எடுத்தவை, ஆனால் அந்த பெயர் மட்டும் அவருக்கு வராது என்று வேடிக்கையாய் சிலர் கூறுவதுண்டு. ஒருவகையில் உண்மையும் அதுதான். ஏராளமான அவரின் திட்டங்கள் இந்தியளவில் பெயர் எடுத்தவை, இந்தியாவைப் பின்பற்ற வைத்தவை.
ஆனால் அந்தப் பெயரை எடுத்துக் கொண்டது வேறு யாரோ. அதனால்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே கருணாநிதி சந்தித்த வன்மம், வஞ்சம், தோல்விகளை வேறு யாரேனும் பார்த்திருந்தால் அரசியலின் அடிப்படையை தாண்டியிருக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆன்மிகவாதிகள் அவரை வந்து பார்த்தனர் இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு லட்சணமா என கேட்பவர்கள் உண்டு. உண்மையான பகுத்தறிவு என்பது குறிப்பிட்டவர்களை ஒதுக்கி தள்ளுவது இல்லை. சமூகத்தில் நடக்கும் அவலங்களை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை மாற்றிக்கொள்ள வைப்பது.
ராமகோபாலன், கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்தார்தான். பகவத் கீதையை கொடுத்தார் அதை கருணாநிதியும் பெற்றுக்கொண்டார்தான். ஆனால், அத்துடன் விடவில்லையே, ராமகோபாலனுக்கு “கீதையின் மறுபக்கம்” என்ற புத்தகத்தை மீண்டும் தந்தார்தானே. அதனை ஏன் பலர் பேசுவதில்லை.
பகவத் கீதை, கீதையின் மறுபக்கம் அவர் திரைத்துறையில் வசனகர்த்தாவாக, கதையாசிரியராக இருந்தார் என்பதற்காக மட்டும் கருணாநிதியை கலைஞர் என்று அழைப்பது இல்லை. தற்போதைய நவீன தமிழ்நாட்டை, பெண்கள் முன்னேற்றத்தை, சமூக நீதியை பார்த்து, பார்த்து செதுக்கியவர் அவர்.
அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வின் ஒரு காட்சி... அவரை கலைஞர் என தற்போது சிலர் அழைக்க மறந்தாலும், மறுத்தாலும் நவீன தமிழ்நாட்டின் கடந்த கால வரலாறும், எதிர்கால சந்ததியும் அவரை கலைஞர் என்றே அழைக்கும். ஆம், யார் ஏற்க மறுத்தாலும் அவர் என்றுமே கலைஞர்தான்...
இதையும் படிங்க: #67YearsOfParasakthi - பகுத்தறிவு பேசிய 'பராசக்தி'