தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன உணர்வு எரிமலை பெரியார்: கி.வீரமணி

சென்னை: தந்தை பெரியார் வெறும் கற்சிலையல்ல இன உணர்வு எரிமலை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி

By

Published : Apr 8, 2019, 6:10 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பா.ஜ.க.வின் கூட்டணி என்றுதான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியினருக்கு உத்தரவு பிறப்பித்தார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றனர் அதிமுக என்ற டெல்லியின் கொத்தடிமைகள். தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர்!

அந்தக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியான ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலையை நேற்றிரவு உடைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர். சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான ஹெச். ராஜா என்ற நரகல் நடையழகர் “பெரியார் சிலையை உடைப்போம்“ என்றதைத் தொடர்ந்து, (7.3.2018) திருப்பத்தூரில் பா.ஜ.கவின் பொறுப்பாளர் சம்மட்டி சகிதம் சென்று பெரியார் சிலையை உடைத்தவுடன், பொதுமக்களே பிடித்துத் தந்தனர். அதுபோலவே ஆலங்குடியில், புதுக்கோட்டை விடுதியிலும் நடந்தது (2018, மார்ச்). தந்தை பெரியார் பிறந்த நாளில் சென்னையில் பாஜகவின் வக்கீல் என்ற பேர்வழி ஒருவர் பெரியார் சிலை மீது செருப்பை வீசி, பிடிபட்டு சிறை தண்டனை பெற்றார். அதே நாளில் தாராபுரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியார் சிலைக்கு மேல் ஷூவை வைத்து பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் ‘தனக்கு பைத்தியம்‘ என்று சான்றிதழ் வாங்கி, வெளியே வந்து நொந்து கிடக்கிறார். ஆரியம் என்றாலும் பாஜக - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை 1971 தேர்தலில் திண்டுக்கல் போன்ற ஊர்களில் அவர் சிலையைத் தகர்க்க, படத்தை எரிக்க இதே ஆரியம் முயற்சித்தபோது தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்டார். ‘‘நானே என் படத்தை அச்சிட்டு வழங்குகிறேன்; கொளுத்துங்க’’ என்று கூறி 1971 தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்தவர் தந்தை பெரியார். திராவிடத் தமிழ் இனத்தை ஒன்றுதிரட்ட இத்தகைய இழிவானவர்களின் இழி செயல்கள், ‘வயல்களில் பயிர் வளர’ நல்ல உரங்களாகவே பயன்படும். அண்ணா திமுக ஆட்சி என்பது, மோடி ஆட்சியிடம் தமிழ்நாட்டை, தமிழர் நலனை, உரிமைகளை அடகு வைத்துவிட்டது; இத்தகைய ஆட்சியில் இந்தத் ‘துணிச்சல்’ வந்திருக்கிறது. ஆட்டம் போடுகிறார்கள்! குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகிறார்கள்.

அண்ணாவின் பெயர் அவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரையே ‘நான் கண்ட ஒரே தலைவர் பெரியார்!’ என்ற அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டவர்களுக்குப் பெரியார் சிலை உடைபடும்போது ஏற்படவேண்டிய உணர்வு ஏற்படவில்லை. ஒரு கண்டனம்கூடத் தெரிவிக்க இயலாத பா.ஜ.க. அடிமை ஆட்சியாக மாறிவிட்டது. திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது; அண்ணா இவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரை. அவ்வளவுதான். தந்தை பெரியாரை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் துப்பு இல்லை. அவர்களைக் காப்பாற்றும் துரோக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது! தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!

இவர்களுக்குப் பாடம் கற்பிக்க சரியான ஒரே வழி - ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற - சட்டமன்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதுதான். இன்றைய நிலையில் பெரியார் அவர்களின் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும். பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details