இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியதையடுத்து, அதனை அவர் மீண்டும் திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அதிலிருந்து இப்பொழுது பின்வாங்குவது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒன்றும் ஏகலைவன், துரோணாச்சாரி காலமல்ல என்றும், இது பெரியார் மண், திராவிட பூமி என்பதை மறக்கவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ‘படமெடுத்துக் கொத்தலாம்’ என்ற நோக்கத்துடன் வெளிவந்த நாகப்பாம்பு மீண்டும் தன் புற்றுக்குள்ளே தலையை இழுத்துக்கொண்டது போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் இருப்பதாகவும், வியாக்கியானங்கள் பேசிவிட்டு, பின்னர் மறுப்புகள் கூறுவது வாடிக்கையான வேடிக்கைகளே எனவும் கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.