தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த வருடம் மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018 மே மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் ஆலையை நேரடி ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் மதிமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
மேலும், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு விசாரிக்க பட்டியிலிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நீதிபதி சசிதரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதியாக இருந்தபோது ஸ்டெர்லைட் தொடர்பாக பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கை விசாரித்து ஸ்டெர்லைட் செயல்படுவதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில், வேதாந்தா தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில், ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி சசிதரன் தெரிவித்தார்.
மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதனால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை தலைமை நீதிபதி எந்த அமர்வுக்கு மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.