கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்குக: பா.ம.க. - local people
இந்த சாதாரண பயிற்சிப் பணிக்கான போட்டித் தேர்வை எழுத ஒரு முறையும், நேர்காணலுக்கு மறுமுறையும் தலா 1,700 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, குறைந்தது இரு நாட்கள் மும்பையில் தங்கியிருந்து திரும்புவது என்பது பொருளாதார அடிப்படையில் சாத்தியமல்ல.
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அணுசக்தித் துறையின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் பிட்டர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளுக்கான பயிற்சி பெற வெளியிடப்பட்டுள்ள ஆள்தேர்வு அறிவிப்பில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் சமூக நீதிக்கு எதிராக அமைந்துள்ளன. தமிழர்களுக்கு அப்பணிகள் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் கடுமையான நிபந்தனைகளை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் கல்பாக்கம், மராட்டியத்தின் தாராப்பூர் ஆகிய இடங்களிலுள்ள அணுமின் நிலையங்களில், பொறியியல் பட்டயப்படிப்பு படித்தவர்களில் 50 பேருக்கும், 12 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. படித்தவர்களில் 110 பேருக்கும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பின்னர் அந்த இடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என்பதால், இது பயிற்சி அறிவிப்பாக இல்லாமல், பணி நியமன அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான நிபந்தனைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் எதிராக அமைந்திருப்பதை ஏற்க முடியாது.
முதலாவதாக, இந்தப் பயிற்சியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் அனைத்தும் மும்பையில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், 12&ஆம் வகுப்பு ஆகிய படிப்புகளை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இந்தப் பயிற்சி இடங்களுக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் மிகவும் சாதாரண ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த பயிற்சியின் போது மாத உதவித் தொகையாக ரூ.10,500 முதல் ரூ.16,000 வரை மட்டுமே வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இந்த சாதாரண பயிற்சிப் பணிக்கான போட்டித் தேர்வை எழுத ஒரு முறையும், நேர்காணலுக்கு மறுமுறையும் தலா 1,700 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, குறைந்தது இரு நாட்கள் மும்பையில் தங்கியிருந்து திரும்புவது என்பது பொருளாதார அடிப்படையில் சாத்தியமல்ல.
ஒரு சாதாரண பணிக்காக போட்டித்தேர்வு எழுத விண்ணப்பதாரர்களை 1700 கி.மீ தொலைவு வரை அலைக்கழிப்பப்பது நியாயமல்ல. இது சமநிலைப் போட்டியையும், சமவாய்ப்பையும் கெடுத்து விடும். மும்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பணிகளைக் கைப்பற்றுவதற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பணிகள் கிடைக்காமல் போவதற்கும் இந்த விதிமுறைகள் வழிவகுத்து விடும் என்று அஞ்சுகிறேன். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 5 இடங்களிலாவது தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, பாலிடெக்னிக் பட்டயப் படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட அனைத்து பயிற்சியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் நடத்தப்படவுள்ளன. அவற்றில் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும், நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் பயிற்சி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முறைகேடுகளுக்கு மட்டுமே வழிவகுக்கும். நிர்வாகத்திற்கும், நேர்காணலை நடத்துபவர்களுக்கும் வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவதற்கு மட்டும்தான் இந்த ஏற்பாடு வழிவகுக்கும். இதை ஏற்க முடியாது.
கல்பாக்கம் மற்றும் தாராப்பூர் அணுமின் நிலைய வளாகங்களில் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்கள் அணு விஞ்ஞானிகளோ, அதற்கும் மேலானவர்களோ இல்லை. மாறாக, வெல்டர், ஃபிட்டர், மெக்கானிக் போன்ற தொழில்நுட்ப பணியாளர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவது தேவையற்றது. போட்டித் தேர்வுகள் மிகவும் கடுமையாக நடத்தப் படுவதால், அதன் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தகுதியானோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் அல்லாத பிற பணியாளர் பணியிடங்களை உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் பெரு நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் மிகப்பெரிய போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது. இது கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் பொருந்தும்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவிருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பணியாளர்கள் தான் என்பதால், அந்தப் பணியிடங்கள் அனைத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்களைக் கொண்டு கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை சார்ந்த இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.