அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவில் கலந்துகொள்ள வந்த ஜெயலலிதா அப்போதைய அதிமுகவினரால் கீழே தள்ளிவிடப்பட்டார். தன்னை யார் யார் கீழே தள்ளிவிட்டார்களோ அவர்களை பின்னாட்களில் தனக்கு கீழே வைத்திருந்தது எல்லாம் வரலாறு.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி-ஜானகி அணி என பிரிந்து செயல்பட்ட அதிமுக பின்னர் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு குடையின் கீழ் வந்தது. அவர் 'கட்சிப் பொதுச்செயலாளராக' பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அக்கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்திவந்தார். அவரைப் பொறுத்தவரை கட்சியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சம் காட்டாமல் கடுமை காட்ட வேண்டும் என்பதே கொள்கை.
இது இப்படி இருக்க நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்திற்கு தலமையேற்ற பின்பு அவரது அடுத்தக் குறி முதலமைச்சர் நாற்காலியை நோக்கிச் சென்றது. அவருக்கு காலம் துணை நின்றது. தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், 1991ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டது. அப்போது ராஜீவ் காந்தி மீதான அனுதாப அலை காங்கிரசுக்கு பலமாக வீசியதால் அக்கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிமுகவை 164 இடங்களில் வெற்றிபெற வைத்து தனது இருப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு ஆரவாரத்தோடு பிரகடனப்படுத்தினார் ஜெயலலிதா. திமுகவோ வெறும் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது.