சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8ஆம் தேதி முதல், 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை, தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மோசஸ் கூறும்போது, “தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறியதுபோல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, உள்ளாட்சி பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
கொளுத்தும் வெயிலிலும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்! அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களை கைது செய்து காவல்துறையினர் அலைக்கழித்தனர். இருப்பினும், கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 15 லட்சம் பேர் உள்ளோம். மேலும் எங்களை சேர்ந்தவர்கள் என 50 லட்சம் பேர் உள்ளனர். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால், அரசுக்கு எந்த வித நிதி சுமையும் ஏற்படாது. மேலும் இத்திட்டத்தில் உள்ளவர்கள் ஓய்வு பெறுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதேபோல் தொகுப்பூதிய மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ளவர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்றுவதால் அரசிற்கு பெரியளவில் செலவு ஏற்படாது. எனவே முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையின் நியாயங்களை புரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நியமிக்க கோரிக்கை!