சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நிவர் புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் தொடங்க முடியாததால் வேல் யாத்திரையை ரத்து செய்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய சென்று இருந்தோம். வரும் 4ஆம் தேதி தொடங்கி, வேல் யாத்திரையில் சாமி தரிசனம் செய்துவிட்டு, 7ஆம் தேதி திருசெந்தூரில் நிறைவு விழா நடக்கிறது. அந்த விழாவிற்க்கு மத்திய பிரதேச முதல்வர் வர உள்ளார்.
ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மீகவாதி, தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. முழு மனதுடன் வரவேற்கும்.
சமஸ்கிருத மொழி யாரும் கேட்காத மொழி என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் இன்னும் கூட கேட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். டி.டி.தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய அரசு சொல்லி இருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தந்து தான் செய்கின்றனர். குறிப்பிட்ட ஒன்றை தாக்கி சொல்வது சரியாக இருக்காது.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்துக் கொண்டு இருக்கிறது.
தாமரை மலர்ந்தே தீரும் என்று தற்போதைய தெலங்கானா கவர்னர், இங்கு மாநில தலைவராக இருந்த போது ஒலித்த சொல்லை தான் நாங்களும் சொல்கிறோம். சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்து விட்டது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமை தான் முறையாக அறிவிக்கும்.