சென்னை:அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் தற்போது குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவறது. இதுவரை 11 நாடுகளில் 80க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 'குரங்கு அம்மை' பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழ்நாடு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்படவேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பரவும் குரங்கு அம்மை வைரஸ்!- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்