சென்னை:சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உதயகுமார் தரப்பில், பாலியல் தொழிலாளிகள் விருப்பப்பட்டு தொழிலில் ஈடுபடும்போது, அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் தொழிலுக்கான விடுதி நடத்துவது தான் சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.