சென்னை: கேரளா மாநிலத்தில், குழந்தைகளை பாதிக்கும் தக்காளி காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவக்கூடிய நோய் என்பதால், தமிழ்நாடு, கேரளா எல்லை மாவட்டங்களில் மூலமாகவும் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது,
”தமிழகத்தில், ‘கை, பாதம், வாய்’ என்ற நோய் தான், தக்காளி காய்ச்சல் என, கேரளாவில் அழைக்கின்றனர். இவை, புதிய வகை நோய் கிடையாது. தமிழகத்திலும், அவ்வப்போது குழந்தைகளை, இந்நோய் பாதிக்கிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள நோய், ‘காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16’ வகையை சார்ந்தது. இதனால், பெரியளவிலான பாதிப்பு ஏற்படாது. இதே வகையை சார்ந்த, ‘என்டிரோ வைரஸ் 71’ ஏற்பட்டால் பாதிப்பு தீவிரமாக இருக்கும்.
ஆனால் தற்போதைய வைரஸ் மிதமாக பாதிப்புகளை ஏற்படுத்தி, ஒரு வாரத்திலேயே குணமாகி விடும். இந்நோய், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. எனவே, காய்ச்சல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல் போன்றவை இருந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்நோய் சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் வாயிலாகவும் பரவக்கூடியது.
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் வாயிலாக, இந்நோயை தடுக்கலாம். குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தினசரி இரண்டு முறை, குழந்தைகளை தண்ணீரால் துடைத்து விடுவதன் மூலமாகவும், இந்நோய் வராமல் தடுக்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:போதை பொருள் தடுப்பு மையங்கள் அங்கீகாரம் பெற்றவையா எனப் பார்க்கவேண்டும் - ராதாகிருஷ்ணன்