ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கல்வி குழுமத்தில் (நந்தா கல்விக்குழுமம்) வருமானவரித்துறையினர் நேற்று காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை, கோவை, திருப்பூர் உள்பட மாநிலம் முழுவதும் 22 இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது.
மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தில் மிகக் குறைவான தொகையை கணக்கில் காட்டி, மீதமுள்ள பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
இதில், சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கல்விக் குழும டிரஸ்டுக்களின் பெயர்களில் முதலீடு செய்து வந்ததும், திருப்பூரை சேர்ந்த பொறியாளர் மற்றும் தொழிலதிபர் கூட்டாகச் சேர்ந்து இதில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், நாமக்கல்லை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், போலி ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை பறிமுதல் செய்துள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கணக்கில் வராத 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வரும் இந்த கல்வி குழுமத்திற்கு சொந்தமாக, பொறியியல், பார்மசி, சித்தா கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ. 2 லட்சம் பறிமுதல்