சென்னை: இன்றைய தினத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் செய்யும் செயல்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் செய்யும் செயலையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
பொதுவாக செல்வாக்கு படைத்தவர்களின் குழந்தைகள் பெரியளவில் எதையும் சாதிக்க மாட்டார்கள் என்ற மாய பிம்பத்தை தகர்த்து எறியும் விதமாக பல நடிகர்களின் பிள்ளைகள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
கலக்கும் பிரபலங்களின் பிள்ளைகள்
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார். அதேபோல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார்.
இப்படி பிரபலங்கள் வாரிசுகள் பிற துறைகளில் ஜொலித்து வருகின்றனர். இந்த வரிசையில் அடுத்ததாக உதயநிதியின் மகன் இன்பன் கால்பந்தில் தனது கவனத்தை செலுத்தி சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வருகிறார்.
கால்பந்தில் ஜொலிக்கும் இன்பன் உதயநிதி
இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய தொழில் முறை கால்பந்து போட்டிகளில், 'லீக்' 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில், 21 அணிகள் பங்கேற்கவுள்ளன. தற்போது 2021-2022ஆம் ஆண்டு லீக் கால்பந்து போட்டியில் களமிறங்கும் அணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் நெரோகா கால்பந்து கிளப் சார்பில் விளையாட முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை நெரோகா அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதேபோல உதயநிதி ஸ்டாலினும் பெருமையோடு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக விளையாடி வரும் இன்பன் உதயநிதி, சென்னையில் மேக்ஸ் விளையாட்டு பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்று வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் மூலம் மக்களை கவர்ந்து அரசியலில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் தடம்பதித்து ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கிறார்.