பணமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரயில்வே துறை சார்பில், ஐஆர்சிடிசி மூலம் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமும், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இயந்திரங்கள் செயல்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதாக கூறப்படும் இக்காலகட்டத்தில், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை கவுன்டரில் பெறாமல், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பெறுவதன் மூலம், தேவையற்ற கூட்ட நேரிசலைக் குறைக்க முடியும். இதனால் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல்வேறு ரயில் நிலையங்களிலும் செயல்படாமல் பழுதாகியுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை, ரயில்வே துறை சீர்செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, புறநகர் ரயில் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலி மூலம் எடுக்கும் வசதி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டாலும், திருவள்ளூர், ராயபுரம் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யூடிஎஸ் மூலம் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணத்தைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.