ஆவடி கோவர்த்தனகிரி பொதிகை நகர் பவானி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி (42). இவர் இதே பகுதியில் லாரி போக்குவரத்து சேவை நடத்திவருகிறார்.
கடந்த 27ஆம் தேதி பழனி வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த இளைஞர் ஒருவர், பழனியிடம் தன்னை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சுப்பிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (34) என்று அறிமுகம் செய்துகொண்டார்.
பின்னர், தனக்கு நன்றாக லாரி ஓட்டத் தெரியும் என்றும், தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பழனி ஓட்டுநர் உரிமத்தை கொண்டு வந்தால் வேலை தருவதாக பழனியும் கூறியுள்ளார்.
அதைக் கொண்டு வருவதாக கூறிவிட்டு ராஜதுரை சென்றதுபோல் காட்டிகொண்டார். மதியம் ஆனதும் பழனி அருகில் உள்ள தன் வீட்டுக்கு சாப்பிடச் சென்ற சமயத்தில் லாரி நிறுத்ததிலிருந்து ஒரு மினி லாரியை ராஜதுரை கடத்திக்கொண்டு மாயமானார்.
இது குறித்து பழனி, ஆவடி காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் ராஜதுரை, லாரியை கடத்திக் கொண்டு போய் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும், அதனை விற்று பணம் சம்பாதிக்க இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
வேலை கேட்டு வந்து லாரியை திருடி சென்றவர் கைது! இதையடுத்து காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று லாரியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ராஜதுரையை பூந்தமல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலர்கள் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.