ஹைதராபாத்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்பு, குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கன மழை, உணவகங்கள் செயல்பட அனுமதி, பெங்களூருவில் பொதுமுடக்கம் தளர்வு, தேனியில் சிறப்பு முகாம் என இன்றைய முக்கிய நிகழ்வுகள் வருமாறு.
- தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 14) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
- டெல்லியில் கனமழை: தேசிய தலைநகர் டெல்லியில் ஜூன் 14ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆராய்சி ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
- மாணாக்கர்கள் விவரங்கள் சரிபார்ப்பு: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவ- மாணவியர் குறித்த விவரங்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விவரங்களை தலைமை ஆசிரியர் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.
- கர்நாடகாவில் பொதுமுடக்கம் தளர்வு: அண்டை மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொதுமுடக்க தளர்வுகள் இன்று முதல் அமலுக்குவருகின்றன.
- கரோனா தடுப்பூசி முகாம்: தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. அதேபோல் சங்ககிரி பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி மற்றும் காய்ச்சல் கண்டறிதல் முகாம்கள் நடைபெறுகின்றன.
- டெல்லியில் உணவகங்கள் திறப்பு: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின்பேரில் டெல்லியில் இன்று உணவகங்கள் திறக்கப்படுகின்றன. உணவகத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
- நீட் தேர்வு ஆலோசனை: நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
- குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்: குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை டெல்லி முதலமைச்சரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்துவைக்கிறார்.